`இனி பேசுவதற்கு எதுவும் இல்லை.. `800 படம் குறித்து விஜய் சேதுபதி!
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை எடுத்துச் சொல்லும் `800' படத்தின் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. தினமும் ஒருவர் எதிர்ப்பு என்கிற ரீதியில் இதில் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கிடையே, ``முரளிதரனின் வாழ்க்கை வரலாறு, ஒரு நல்ல கதை என்பதால் அதில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை, இப்போது முன்வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் படம் பதில் சொல்லும்" இலங்கை ஊடகத்திடம் தனது நிலைப்பாடு குறித்து எடுத்து கூறி இருந்தார் நடிகர் விஜய் சேதுபதி.
இதன்பின், முரளிதரன் ஒரு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு, ``என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியிருந்தார். இந்த அறிக்கையை டேக் செய்து, நடிகர் விஜய் சேதுபதி, `நன்றி வணக்கம்' என்று முடித்துக்கொண்டார். எனினும் படத்தில் இருந்து விலகினாரா இல்லையா என்பது குறித்து தெளிவாக கூறவில்லை.
இதற்கிடையே சற்று முன் முதல்வரின் தயார் மறைவுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி. அஞ்சலிக்கு பின் பேசிய விஜய் சேதுபதி, ``நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டது என்று பொருள். 800 திரைப்படம் குறித்து பேசுவதற்கு இனி எதுவும் இல்லை" என்று தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளார்.