நீண்ட தூர ரயில்களில் உணவுக் கூட பெட்டிகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு ...!
நீண்ட தூர ரயில்களில் உள்ள உணவுக் கூட ( pantry car) பெட்டிகளை அகற்றிவிட்டு ஏசி கோச்சுகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிறப்பு ரயில்களாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.இந்த சிறப்பு ரயில்களில் பேண்ட்ரி கார் எனப்படும் உணவுகூட பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை. எனவே, இனி முழுமையாக ரயில்கள் இயக்கப்படும் போது இதுபோன்ற பெட்டிகளை இணைக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கு மாற்றாக மூன்றடுக்கு ஏசி கோச் ஒன்றை இணைக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இப்படி உணவு கூட கோச்சுகளை நிறுத்துவதன் மூலம், ஆண்டுக்கு ரூ .1,400 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில்வே நிர்வாகம் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட ரயில்கள் உணவுகூட பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகின்றன. எனவே, இந்தப் பெட்டிகளை அகற்றுவதன் மூலம் ரயில்வேக்கு எந்த இழப்பும் ஏற்படாது. எனினும், ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.
முக்கிய ரயில் நிலையங்களின் சமையலறைகளில் தயாரிக்கப்பட்ட உணவை நீண்ட தூர ரயில்களில் பயணிகளுக்கு வழங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் மற்றும் சிறு உணவகங்கள் தொடங்கப்படுவதால் பயணிகள் உணவு பெற எந்தவொரு பிரச்சனையையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது .
ரயில்களில் கேட்டரிங் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் ஏற்று நடத்துகிறது . இந்த நிறுவனம் இனி முக்கிய ரயில் நிலையங்களில் சமையலறைகளை நிறுவவும் திட்டமிட்டுள்ளது. தேசிய ரயில்வே கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு ஆகியவை இந்த முடிவை வரவேற்றுள்ளன.
குரானா தொற்று காரணமாக ஏற்கனவே நீண்ட தூர ரயில்களில் தலையணைகள் மற்றும் போர்வைகளை விநியோகிப்பதை ரயில்வே நிர்வாகம் நிறுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக, பயணிகள் அவற்றை ரயில் நிலையங்களிலிருந்தே வாங்கிக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்பட்டு வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டாலும் இந்த நடைமுறைகளை மாற்றிக்கொள்ள ரயில்வே நிர்வாகம் தயாராக இல்லை .