உணவுப் பொருட்களை டெலிவரி செய்வோர் காவல்துறையில் சான்று பெறுவது கட்டாயம்
ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் டெலிவரி சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் காவல்துறையிடம் நன்னடத்தை சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் எனக் காவல் துறை உத்தரவிட்டுள்ளது.பெருநகரங்களில் உணவுப்பொருட்களை வீடு தேடி வழங்கும் டெலிவரி நிறுவனங்களின் பணிபுரிவோர் பற்றிய முழு விவரங்களுடன் காவல்துறைக்கு விண்ணப்பித்து நன்னடத்தை சான்று பெற வேண்டும் எனச் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
வீடு தேடி உணவு சப்ளை என்ற பெயரில் குற்றச்சம்பங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குற்றப் பின்னணி குறித்துத் தெரிந்து கொள்ளவும் இது உதவும்.இப்படி உணவுகளை வீடு தேடி வழங்கும் நிறுவனங்கள் மாநகர காவல் துறையின் இணையதளம் மூலம் நன்னடத்தை சான்றிதழைப் பெறலாம் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.