நள்ளிரவில் வாட்ஸ்அப் குரூப்பில் துணை முதல்வர் அனுப்பிய ஆபாச வீடியோ..
துணை முதல்வரின் மொபைல் போனில் இருந்து நள்ளிரவில் வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளது. பெண்கள் உள்ள குரூப்பில் பகிரப்பட்டதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு அக்கட்சியைச் சேர்ந்த சந்திரகாந்த கவ்லேகர் துணை முதல்வராக உள்ளார்.
அவரது மொபைல் போனில் இருந்து வில்லேஜஸ் ஆப் கோவா(Villages of Goa) என்ற வாட்ஸ் குரூப்பிற்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.20 மணிக்கு ஒரு ஆபாச வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. அந்த குரூப்பில் பெண்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் பலரும் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிலர் துணை முதல்வரை போனில் காய்ச்சி எடுத்தனர்.அவர் உடனடியாக அதை அழித்து விட்டு, தனக்குத் தெரியாமல் யாரோ செய்திருப்பதாகக் கூறினார்.
மேலும், நேற்று(அக்.19) அவர் கோவா போலீஸ் சைபர் கிரைம் பிரிவில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர், நான் நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். என் அருகே மொபைல் போன் இல்லை. யாரோ எனது மொபைல் போனை ஹேக் செய்து அதிலிருந்து ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளனர். அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.இதற்கிடையே, துணை முதல்வர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவா மாநில காங்கிரஸ் ஒரு புகாரைக் கொடுத்துள்ளது. கோவா பார்வர்டு பிளாக் மகளிர் அணியும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளது.
அதில், துணை முதல்வர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவுகள் 67, 67ஏ மற்றும் இ.பி.கோ.354ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.துணை முதல்வர் கவ்லேகர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர். இம்முறை ஆபாச வீடியோ விவகாரம் அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவரது பதவிக்கு ஆபத்து என்று கோவா அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.