கவர்னருக்கு மானமிருந்தால் பதவி விலகியிருப்பார்.. சரத்பவார் சூடு..

மானம் இருந்தால் பதவியில் நீடித்திருக்க மாட்டார் என்று மகாராஷ்டிர கவர்னரை சரத்பவார் சாடியுள்ளார்.மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. அங்கு பள்ளிகள், கோயில்கள் போன்றவை இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவர், நீங்கள்(உத்தவ்) தீவிர இந்துத்துவா கொள்கை கொண்டவர். ராமஜென்ம பூமிக்கு சென்று வந்திருக்கிறீர்கள். மற்ற கோயில்களுக்கும் சென்று வந்திருக்கிறீர்கள்.

ஆனாலும், மகாராஷ்டிராவில் ஏன் கோயில்களைத் திறக்காமல் வைத்திருக்கிறீர்கள்?உங்களுக்குப் பிடிக்காத மதச்சார்பின்மைக்கு நீங்கள் மாறி விட்டீர்களா? என்று கேட்டிருந்தார். இதற்கு உத்தவ் தாக்கரே அளித்த பதிலில், எனக்கு உங்கள் சர்டிபிகேட் எல்லாம் தேவையில்லை என்று காட்டமாகக் கூறியிருந்தார். மேலும், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டிருக்கும் போது கவர்னர் எப்படி இது போல் பேசலாம் என்று பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், கவர்னர் தேவையில்லாமல் பேசியிருக்கக் கூடாது என்று கண்டிருத்திருந்தார்.

இந்நிலையில், என்.சி.பி. தலைவர் சரத்பவார் நேற்று கூறுகையில், கவர்னர் பேசியதற்கு உள்துறை அமைச்சரே கடுமையாகச் சாடியிருக்கிறார். சுயமரியாதை உள்ள யாருமே இதற்கு மேலும் பதவியில் நீடித்திருக்க மாட்டார்கள். மானமிருந்தால் பதவி விலகியிருப்பார்கள். இதற்கு மேல் கவர்னரைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? என்றார்.ஏற்கனவே கவர்னரை திரும்ப பெற வேண்டுமென்று பிரதமருக்கு சரத்பவார் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More News >>