பணமல்ல, மகிழ்ச்சியான நல்ல நிமிடங்களை சம்பாதியுங்கள் தம்பிக்கு நடிகை நவ்யா நாயர் திருமண வாழ்த்து.
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயரின் தம்பி ராகுல் திருமணம் கொச்சியில் நடந்தது. பணம் அல்ல, வாழ்க்கையில் நல்ல நிமிடங்களைத் தான் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்று தனது தம்பிக்கு நவ்யா நாயர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் கடந்த 2001ல் இஷ்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர். இதன்பின்னர் நந்தனம், கல்யாணராமன், சதுரங்கம், கிராமபோன் உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அழகிய தீயே என்ற படத்தில் அறிமுகமானார். இதன் பின்னர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னட மொழியிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு மும்பையில் தொழிலதிபராக உள்ள சந்தோஷ் மேனன் என்பவரை நவ்யா நாயர் திருமணம் செய்தார். இவருக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உண்டு.
இந்நிலையில் இவரது ஒரே ஒரு தம்பியான ராகுல் நாயரின் திருமணம் கொச்சியில் நடந்தது. இவருக்கும் திருச்சூரை சேர்ந்த சுவாதி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா நிபந்தனைகளின்படி நடந்த இந்த திருமணத்தில் மணமக்களின் பெற்றோர் உள்பட நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் தனது தம்பியின் திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நவ்யா நாயர், மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்த்தில் அவர் கூறியது: நான் கண்ணன் என்று அழைக்கின்ற எனது செல்ல தம்பிக்கு திருமண வாழ்த்துக்கள்.
என்னுடைய சகோதரன், நண்பன் என உனக்கு பல முகங்கள் உள்ளன. சூரியனுக்கு கீழே இருக்கிற அனைத்து விஷயங்கள் குறித்தும் அறிவுபூர்வமாகவும், முட்டாள்தனமாகவும் விவாதித்துள்ளோம். இரவு எத்தனை நேரமானாலும் எங்களது விவாதம் முடிவடையாது. நான் இப்போதும் உன்னை திட்டுவது உண்டு, அடிப்பது உண்டு, கிண்டல் செய்வதும் உண்டு. நீ இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்தது எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்றும் நீ எனக்கு சோட்டு தான். சுவாதி, கண்ணா உங்கள் இருவரையும் நான் மிகவும் விரும்புகிறேன், நேசிக்கிறேன். நீங்கள் இரண்டு பேரும் மகிழ்ச்சியாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்ப்பத்தில் தான் உள்ளது. ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழவேண்டும். நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பது தான் முக்கியமாகும். பணமல்ல, நல்ல நிமிடங்களை சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு நவ்யா நாயர் குறிப்பிட்டுள்ளார்.