பழனியில் போலீசார் தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை. உறவினர்கள் சாலை மறியல்.
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான். இவர் பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். பழனி அருகேயுள்ள புது ஆயக்குடியை சேர்ந்த சோபியா என்ற பெண்ணுக்கும் இம்ரானுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக இம்ரானுக்கும், சோபியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சோபியாவின் உறவினர்கள் இம்ரான் மீது பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பழனி அனைத்து ம களிர் காவல் ஆய்வாளர் தேன்மொழி இம் ரானை ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார். அப்போது இன்ஸ்பெக்டர் அவரை தகாத வார்த்தையால் பேசியும், தாக்கிய தாகவும் கூறப்படுகிறது. ஆய்வாளரின் நடவடிக்கையால் மன உளைச்சலில் இருந்த இம்ரான் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெய்க்கரபட்டி போலீசார் இம்ரானின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இம்ரானின் உறவினர்கள் ஆய்வாளர் தேன்மொழி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பழனி திண்டுக்கல் சாலையில் அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட இம்ரானின் உறவினர்களிடம் பழனி டி.எஸ். பி. சிவா பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.