பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்... என்னவாக இருக்கும்?
பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். அவர் எதைக் குறித்துப் பேசப் போகிறாரோ என்ற பரபரப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.மோடிக்கு முன் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய், ராஜீவ் காந்தி உள்படப் பிரதமர்கள் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பதும், நாட்டு மக்களிடம் டிவி அல்லது வானொலி மூலம் அடிக்கடி உரையாடுவதும் உண்டு.
ஆனால் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மிக மிக அபூர்வமான ஒன்றாகும். கடந்த 6 வருடங்களில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததை விரல்விட்டு எண்ணிவிடலாம். 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் பேசுவார். இதுதவிர மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதற்காக மட்டுமே டிவியில் பேச வருவது வழக்கம்.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியை இந்திய மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். அன்று இரவு தான் திடீரென டிவியில் தோன்றிய பிரதமர் மோடி, அன்று நள்ளிரவு முதல் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தடாலடியாக அறிவித்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து இந்திய மக்கள் மீண்டு வர பல வருடங்கள் ஆனது. இதன் பிறகு பிரதமர் மோடி எப்போதாவது டிவியில் பேசப்போகிறார் என அறிவிக்கப்பட்டால் மக்களிடையே ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். இதே போலத் தான் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கிய போது டிவியில் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக் டவுனை அமல்படுத்தப் போவதாக அறிவித்தார்.
இதுவும் மக்களுக்குப் பேரிடியாக அமைந்தது. லாக் டவுன் தொடங்கிய பின்னர் இதுவரை மோடி 6 முறை மக்களிடம் பேசியுள்ளார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்குப் பிரதமர் மோடி மீண்டும் மக்களிடையே உரையாற்றப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் என்ன பேசப் போகிறார் என்பது குறித்து மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் குளிர்காலம் தொடங்க உள்ளதால் கொரோனா மேலும் அதிக அளவில் பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுதற்காகவே அவர் மக்களிடையே பேசப் போவதாகக் கூறப்படுகிறது.