பிரான்சில் பள்ளி ஆசிரியர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் , காட்டிக் கொடுத்த 4 மாணவர்களும் கைது...!

பிரான்சில் பள்ளி ஆசிரியர் தீவிரவாதியால் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த தீவிரவாதிக்கு ஆசிரியரை அடையாளம் காண்பித்துக் கொடுத்த 4 பள்ளி மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.பிரான்ஸ் தலைநகர் பாரீசின் வடமேற்கு புறநகர்ப் பகுதியான கோன்பிளான்ஸ் செயின்ட் ஹோனரின் பகுதியில் தெ அவுலுன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் சாமுவேல் பாட்ரி (47). இவர் மாணவர்களுக்குச் சரித்திரம் மற்றும் புவியியல் பாடங்களை எடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் வகுப்பில் முஹம்மது நபி குறித்த கார்ட்டூன் படங்களைப் பயன்படுத்தி கருத்துச் சுதந்திரம் என்ற தலைப்பில் பாடம் எடுத்துள்ளார்.இது மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சில மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் இது குறித்து புகார் கூறியுள்ளனர்.

இதையடுத்து ஒரு மாணவனின் பெற்றோர் அந்த ஆசிரியருக்கு எதிராக இணையதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இந்த பள்ளிக்கு அருகே வைத்து ஆசிரியர் சாமுவேலை ஒருவர் பட்டப்பகலில் கழுத்தை அறுத்தார். இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியர் சாமுவேல் ரத்தவெள்ளத்தில் பிணமானார். இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. இதுகுறித்து அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து கொலையாளி அங்கிருந்து தப்ப முயன்றான். ஆனால் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியரைக் கொன்ற கொலையாளி கொல்லப்பட்டான். விசாரணையில் ஆசிரியரைக் கொன்றது அப்தவுலக் (18) என்றும், அந்த நபர் முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இந்த சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளியின் பெற்றோர், அவனது தம்பி உள்பட 4 பேரைக் கைது செய்தனர். மேலும் கொலையாளியுடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிரியர் சாமுவேலைத் தீவிரவாதிக்குக் காட்டிக் கொடுத்த கொடுத்த அதே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பிரான்சில் செயல்பட்டு வரும் 56 முஸ்லிம் அமைப்புகள் குறித்து அரசு விசாரணையை தொடங்கியுள்ளது. பிரான்சில் செயல்பட்டுவரும் 'கலெக்டிவ் அகைன்ஸ்ட் இஸ்லாமோஃபோபியா இன் பிரான்ஸ்' என்ற அமைப்பை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறியுள்ளார். இந்த அமைப்பு நாட்டின் எதிரி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News >>