8 மாதமாக தியேட்டர்கள் மூடலால் கஷ்டத்தில் இருக்கிறோம்.. அபிராமி ராமநாதன் உருக்கமான கோரிக்கை..

கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறந்த நிலையில் தமிழகத்தில் திறக்க அனுமதி கிடைக்கவில்லை.திரை அரங்குகள் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் திரை அரங்கு மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் அபிராமி ராமநாதன் தலைமையில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு திரை அரங்கு மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் கவுரவ தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:இன்று காலை அபிராமி ராம நாதன் தலைமையில் பன்னீர் செல்வம், அரூர் ராஜா, இளங் கோ, சீனிவாசன், வெங்கடேஷ், சுப்பு மற்றும் பலர் அடங்கிய குழு ஒன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வீட்டில், சந்தித்து அவருடைய தாயார் மறைவு குறித்து துக்கம் விசாரித்தனர், பின்பு திரை அரங்குகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதற்கும் அவர் பரிவோடு எங்களைக் கேட்டு மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து விரைவில் திரையரங்குகளைத் திறப்பதற்கு ஆவண செய்கிறேன் என்று கூறினார்.

கடந்த 8 மாதமாகத் திரையரங்குகள் பூட்டி இருப்பதோடு வேலை ஆட்கள் மற்றும் இதர செலவுகளால் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம். ஆதலால் எல் பி டி வரி எட்டு சதவீதத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டோம். அதற்கும் அவர் மற்றவர்களுடன் ஆலோசித்து ஆவண செய்கிறேன் என்று கூறினார்,இவ்வாறு தமிழ்நாடு திரை அரங்கு மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் கவுரவ தலைவர் அபிராமி ராமநாதன் அறிக்கையில் கூறி உள்ளார்.

More News >>