ஒரே ஷாட்டில் 100 நடிகர்கள்.. பாப்புளர் இயக்குனர் புதிய முயற்சி..
புதிய பாதை படத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்கிய பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ்-7 படம் வரை அதைத் தொடர்கிறார். இவர் தனது அடுத்த படத்தில் இன்னொரு புதிய முயற்சி மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்ட படம் ஒத்த செருப்பு சைஸ்-7.இதில் மாசிலாமணி என்கிற ஒரு கதாபாத்திரம் மட்டுமே படம் முழுவதும் நடித்திருக்கும் அந்த வேடத்தை பார்த்திபனே ஏற்றிருந்தார் என்பது கூடுதல் சிறப்பு. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகப் பிரபலங்களும் இப்படத்தை பார்த்து பார்த்திபனுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிநாடு விருதுகளையும் இந்தப் படம் வென்றது.
இப்படம் ஆஸ்கர் விருதுக்காக விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தேர்வு குழு தேர்வு செய்யவில்லை . இதனால் தமிழ்த் திரையுலகத்தினர் பலரும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். மற்றொரு முயற்சியாக ஆஸ்கர் விருதுக்கு ஒத்த செருப்பு படத்தை நேரடியாக அனுப்பி வைக்கப் பார்த்திபன் பரிசீலித்து வருகிறார். வெளிப் படங்களில் மாறுபட்ட பாத்திரங்கள் ஏற்றாலும் தான் இயக்கும் அடுத்த படத்தையும் வித்தியாசமாக உருவாக்க போவதாக தெரிவித்துள்ளார். அதாவது புதிய படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கவுள்ளார். அப்படத்துக்கு. இரவின் நிழல் எனப் பெயரிட்டுள்ளார் பார்த்திபன். ஒரேயொரு ஆளாக ஒத்த செருப்பு படத்தில் நடித்த பார்த்திபன், இந்தப் புதிய படத்தில் ஒரே ஷாட்டில் 100 கதாபாத்திரங்களை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
கொரோனா லாக் டவுன் காலத்தில் இதற்கான ஷாட்கள் கோர்த்து எப்படி கேமரா கோணம் வைப்பது, நடிக்கவிருக்கும் நடிகர்கள் எப்படி அணிவகுக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஒத்திகைப் பயிற்சி அளித்து வருகிறார். இந்தப் பயிற்சி தொடர்ச்சியாக 35 நாட்கள் நடக்க உள்ளதாக தெரிகிறது. 10 நிமிடம் வரும் ஒரு நடிகருக்கு 20 நாட்கள் தொடர் பயிற்சி அளித்திருக்கிறார். மொத்தம் 2 மணி நேரம் ஓடக்கூடிய படமாக இது உருவாக உள்ளது. சந்தானகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.இதனைவொரு திரில்லர் பாணி கதையாக உருவாக்க உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.