`எச்சரிக்கையாக இருங்கள்... நாட்டு மக்களுக்கு மோடியின் வார்னிங்!

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளேன் என பிரதமர் மோடி சில மணி நேரங்களுக்கு முன்பு ஒரு டுவீட் பதிவிட்டு இருந்தார். ஏற்கனவே இதுபோன்று கூறி பண மதிப்பிழப்பு போன்ற பல்வேறு அதிர்ச்சிகர அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருப்பதால் இன்று என்ன அறிவிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே, ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் உரை நிகழ்வை கேள்விப்பட்டு, ``சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை நாட்டு மக்களிடம் பிரதமர் அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, சரியாக 6 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற தொடங்கினார். அதில், ``ஊரடங்கு முடிந்து பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இதேபோல் கொரோனா இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குணமடைவோர் விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது. எனினும் கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக செல்லவில்லை என்பதை மக்கள் உணரவேண்டும். கொரோனா சிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. நாடு முழுவதும் பரிசோதனைக்கு 2,000 ஆய்வகங்களும், பல லட்சம் சிகிச்சை மையங்களும் உள்ளன. கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

உலக அளவில் மற்ற நாடுகளைவிட கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு. கொரோனா ஒழிந்து விட்டதாக எண்ணி மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது; ஊரடங்கு முடியலாம் ஆனால் கொரோனாவின் தாக்கம் நீடிக்கும். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. விரைவில் தடுப்பூசி கிடைக்கும். இந்தியாவில் தற்போது பண்டிகை காலம். திருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறது. பல்வேறு தேவைகளுக்காக மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் வைரஸ் என்பது முற்றிலுமாக அழிந்து விடவில்லை. பண்டிகை காலத்தை முன்னிட்டு நாம் அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறார்.

More News >>