கொரோனா அறிகுறிகளுடன் இறந்த நாயின் பிரேதப் பரிசோதனை நடத்திய டாக்டருக்கும் கொரோனா
கேரளாவில் கொரோனா நோய் அறிகுறிகளுடன் இறந்த நாயின் பிரேதப் பரிசோதனை நடத்திய கால்நடை டாக்டருக்கும் கொரோனா பரவியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கேரளாவில் மனிதர்களிடமிருந்து ஒரு வளர்ப்பு நாய்க்கும், பின்னர் அந்த நாயிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கொட்டியம் என்ற இடத்தில் ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவருக்கு கொரோனா பரவியது.இவர்கள் தங்கள் வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த நாய்க்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. மூச்சுத் திணறலும், வயிற்றுப் போக்கும் காணப்பட்டது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் அந்த நாய் உயிரிழந்தது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் அங்குச் சென்று பரிசோதனைக்காக நாயின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அந்த நாய்க்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்த நாயின் உடல் உறுப்புகள் கூடுதல் பரிசோதனைக்காக போபாலில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நாய்க்குப் பிரேதப் பரிசோதனை நடத்திய ஒரு டாக்டருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து நாய்க்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட கால்நடை மருத்துவமனை உடனடியாக மூடப்பட்டது. டாக்டருடன் பணியிலிருந்தவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.