கொரோனா : ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மகாடோவின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சராக உள்ள ஜகர்நாத் மகாடோவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் ராஜேந்திர இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (ரிம்ஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூச்சுத் திணறல் அதிகரித்ததால் அக்டோபர் 1ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதையடுத்து ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் , செயற்கை சுவாசம் வழங்கும் எக்மோ சிகிச்சைக்குப் புகழ்பெற்ற சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்களை வரவழைத்தார். ஜகர்நாத் மகாடோவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உடனடியாக சென்னைக்குக் கொண்டு செல்ல வேண்டும் வலியுறுத்தினர். இதையடுத்து அமைச்சர் ஜகர்நாத் மகாடோ தனி விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார்.ராஞ்சி விமான நிலையத்தில் அமைச்சர் ஜகர்நாத்தை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பாடல் பட்ரலேக் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.
ராஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஜகர்நாத் சிகிச்சை பெற்று வந்தார், ஆனால் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே , மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சிறந்த சிகிச்சைக்காக அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.ஜகர்நாத் மகாடோவுக்கு நுரையீரல் தொற்று அதிகமாக உள்ளதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் தற்போது அவருக்கு எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது