பாஜக பெண் தலைவரை ஐட்டம் என்ற கமல்நாத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்.
மத்திய பிரதேச மாநில பாஜக பெண் அமைச்சரை ஐட்டம் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரான கமல்நாத் கடந்த சில தினங்களுக்கு முன் குவாலியரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், மத்தியப்பிரதேச மாநில பாஜக பெண் அமைச்சரான இமார்தி தேவியை ஐட்டம் என்று கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக பெண் அமைச்சரை ஆபாசமாக பேசிய கமல்நாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் ராகுல்காந்தி எம்பியிடம் கமல்நாத்தின் பேச்சு குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், பெண்களை கவுரவமாக நடத்த வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகும். பாஜக பெண் அமைச்சர் குறித்து கமல்நாத் கூறியது துரதிர்ஷ்டவசமானதாகும். அவர் அவ்வாறு பேசியிருக்க கூடாது. பெண்களுக்கு எதிராக யார் பேசினாலும் அது கண்டிக்கத்தக்கதாகும். கமல்நாத் எனது கட்சிக்காரர் என்றாலும் அவர் செய்தது தவறு தான் என்று கூறினார்.
இதற்கு கமல்நாத் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ராகுல் காந்தி கூறியது அவரது சொந்த கருத்தாகும். நான் என்னுடைய கருத்தில் இருந்து பின் வாங்க மாட்டேன். மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் எதற்காக அந்த வார்த்தையை பயன்படுத்தினேன் என்பது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டேன். அதனால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு பேசவில்லை. நான் பயன்படுத்திய அந்த வார்த்தை யாருக்காவது அவமானமாக தோன்றியிருந்தால் நான் அதற்காக வருத்தப்படுகிறேன் என்று அவர் கூறினார்.