கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு அயர்லாந்தில் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் லாக்டவுன்.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து அயர்லாந்தில் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் லாக்டவுன் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடாகிறது அயர்லாந்து. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை. ஆனாலும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் லாக்டவுனை வாபஸ் பெற்றுவிட்டது. இந்நிலையில் அயர்லாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக பெருமளவு அதிகரித்து வருகிறது. இதையடுத்து மீண்டும் லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நாளை (21ம் தேதி) நள்ளிரவு முதல் மீண்டும் லாக்டவுன் அமல் படுத்தப்படுவதாக அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவி மூலம் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: சமீப நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 21ம் தேதி நள்ளிரவு முதல் 6 வாரங்களுக்கு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. பள்ளிகளுக்கு லாக்டவுனிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அத்தியாவசிய சேவை பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பயணம் செய்வதற்காக மட்டும் பொதுப் போக்குவரத்தில் சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும். அத்தியாவசியம் இல்லாத சில்லறை விற்பனைக் கடைகள் அனைத்தும் மூடப்படும்.
பார்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் நிபந்தனைகளுடன் திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும். இங்கு அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி கிடையாது. வீடுகளுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உடற்பயிற்சிக்காக செல்ல அனுமதி உண்டு. தூர ஏல்லையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பள்ளிகளும், குழந்தைகள் பராமரிப்பு மையங்களும் செயல்படலாம். குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் இந்த கொள்ளை நோய்க்கு இரையாகக் கூடாது என்பதற்காகவே இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மிக கடுமையானதாக தோன்றினாலும் இந்த வருடம் நாம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டுமென்றால் இது போன்ற நடவடிக்கைகள் தேவையாகும். தற்போது லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ள 6 வாரங்களில் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடலாம். இவ்வாறு அவர் கூறினார்.