சென்னை பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருங்காட்சியமாகிறது : பணிகள் தீவிரம்
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகம் விரைவில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் நேற்று துவங்கின.சென்னை எழும்பூரில் முன்பு இருந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கடந்த 1842-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வேப்பேரியில்தான் சென்னை மாநகர காவல்துறையின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது, பின்னர், எழும்பூர் பாந்தியன் ரோட்டில் இருந்த ஒரு பங்களாவுக்கு மாற்றப்பட்டது . 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த பங்களா அருணகிரி முதலியார் என்பவருக்குச் சொந்தமானது அப்போது அந்த பங்களாவுக்கு மாத வாடகை 165 ரூபாய் .
1856 இல் போலீஸ் சட்டம் இயற்றப்பட்டதும், நிரந்தர காவல் அமைப்பு உருவாக்கப்பட்டது.சென்னை மாநகர காவல்துறையின் முதல் கமிஷனராக லெப்டினன்ட் கர்னல் ஜெ.சி. போல்டர்சன் என்பவர் நியமிக்கப்பட்டார். துணை ஆணையர்களும், உதவி ஆணையர்களும் அவருக்கு உதவியாக நியமிக்கப்பட்டனர்.சில மாதங்கள் கழித்து அந்த பங்களாவை ரூ.21 ஆயிரம் கொடுத்து காவல்துறை கிரையம் செய்து கொண்டது. பாரம்பரியம் மிக்க சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் இடப் பற்றாக்குறை மற்றும் புதுப்பிக்க முடியாமலும் இருந்து வந்தது. எனவே, நவீன வசதிகளோடு புதிதாகக் கட்டடம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது
இதைத்தொடர்ந்து பழமை மாறாமல் காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 25 கோடி செலவில் வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் இயங்கி வந்த மாநகர போக்குவரத்துக் காவல்துறை கூடுதல் ஆணையர் அலுவலக வளாகத்தில், 1.73 லட்சம் சதுர அடியில் 8 தளங்களுடன் புதிய ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இந்த புதிய கட்டிடத்தில் காவல் ஆணையரகம் செயல்படத் தொடங்கியது.
பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தின் முன் பகுதியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, அதில் தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிபிசிஐடி, ரயில்வே காவல்துறை ஆகிய பிரிவுகள் இயங்கிவருகின்றன . ஆனால் அங்குக் காவல் ஆணையர் அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் அப்படியே உள்ளன. இப்போது அந்த அறைகளைச் சீரமைத்து அருங்காட்சியகமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.வரும் பிப்ரவரி மாதம் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் ஏற்கனவே போலீஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போலீஸ் அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் அமைக்கப்படுகிறது.இந்த அருங்காட்சியகத்தில் காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடர்பான அந்த காலத்தில் இயற்றப்பட்ட முக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயக் காவல் துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழகக் காவல்துறையின் தொடக்கக் கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்ப்படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செய்தித் தொகுப்புகள், வயர்லெஸ் கருவிகள், பதக்கங்கள், கலைப்பொருள்கள் ஆகியவை காட்சிப் பொருளாக இடம்பெற உள்ளன.
தமிழகக் காவல்துறையின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் இருக்கும்.