எனது நேர்மை குறித்து கேள்வி எழுகிறது - பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் வேதனை
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனது நேர்மை குறித்து கேள்வி எழுகிறது என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
கேப்டவுனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் புதுவிதமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். பீல்டிங் செய்தபோது, அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய மஞ்சள்நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது. அதை பயன்படுத்தி அவர் பந்தை சேதப் படுத்தி இருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியது.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் கூறுகையில், ‘அந்த பொருள் சொரசொரப்பு காகிதம் போன்று இருக்கிறது. அதில் தேய்த்து பந்தின் தன்மையை அவர் மாற்றி இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் நடுவர் பந்தை உடனடியாக மாற்றாதது எனக்கு ஆச்சரியம் அளித்தது’ என்றார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில், ‘உணவு இடைவேளையின் போது வீரர்களிடம் இது பற்றி ஆலோசித்தேன். பான்கிராப்ட்டின் செயல் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. இதற்காக வருந்துகிறேன். இதன் மூலம் கேப்டனாகிய எனது நேர்மை குறித்தும், அணியின் நேர்மை குறித்தும் கேள்விகள் எழுகிறது. வருங்காலத்தில் இது போன்று மீண்டும் நடக்கக்கூடாது’ என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com