வீணாய்போன தவானின் சதம்! பிளே ஆஃப் நோக்கி பஞ்சாப்!
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (20-10-2020) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தால் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவு, கனவாகவே போயிருக்கும். டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
கடந்த சில போட்டிகளில் இருந்தே சிறப்பாகச் செயல்பட்டு வரும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், நேற்றைய போட்டியிலும் வானவேடிக்கை காட்டினார்.
தவான் ஒருபுறம் மிரட்டிக் கொண்டிருந்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ஷிகர் பார்மிற்கு வந்தால் பிர்த்வி ஷா ஃபார்ம் அவுட் ஆகி விடுவார் போல். முதலில் தவான் சொதப்பிய போது ஷா மிரட்டிக் கொண்டிருந்தார். இப்போது ஷா சொதப்புகிறார் தவான் மிரட்ட ஆரம்பித்து விட்டார். நேற்றைய போட்டியில் தொடக்கம் முதலே திணறிய ப்ரித்தி ஷா 7 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் (14), ஃபண்ட் (14), ஸ்டேய்னஸ் (9) மற்றும் நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கிய ஹெடமயர் ( 10) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.
ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான் 61 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சர் என 106 ரன்களை விளாசி வியப்பூட்டினார். அடுத்து வரும் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் தனக்கான இடத்தை இந்த தொடர் சதங்களின் மூலம் முன்பதிவு செய்து கொண்டார். இந்த சீசனில் இவரின் இரண்டாவது சதமாகும், அதுவும் தொடர்ச்சியாக அடிக்கப்பட்டது. எனவே இருபது ஓவர் முடிவில் டெல்லி அணி 164 ரன்களை சேர்த்தது.
இருபது ஓவரில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஓவருக்கு 8.25 ரன்கள் தேவைப்பட்டது.தொடர்ந்து கலக்கி வரும் பஞ்சாப் அணியின் தொடக்க இணையான ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி இந்த போட்டியில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர். இவர்களின் விக்கெட் இழப்பால் பஞ்சாப் அணியின் வெற்றி கேள்விக்குறியானது.
ஆனால் அடுத்துக் களமிறங்கிய கெயில் 29 ரன்னில் அவுட்டாக பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவு பறிபோகும் நிலைக்குள்ளானது. ஆனால் மேக்ஸ்வெல் மற்றும் பூரன் இருவரும் நிதானமாக ஆட அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது.இதுவரை எந்த போட்டியிலும் ஜொலிக்காத மேக்ஸ்வெல் ( பஞ்சாப் அணியில் கேதார் ஜாதவ்) சிறப்பாக விளையாடி 32 ரன்களை விளாசினார். பூரன் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி இணைந்து 69 ரன்களை சேர்த்து அணிக்குப் பக்கபலமாக இருந்தது.
அதிரடியாக விளையாடிய பூரன் 28 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்சர் விளாசி 53 ரன்களை கடந்தார். பின்னர் தீபக் ஹுடா (15)மற்றும் நீஷம் (10) இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
டெல்லி அணியின் சார்பில் ரபாடா சிறப்பாகப் பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே மிடில் ஆர்டரில் சொதப்பி வந்த பஞ்சாப் அணிக்கு இந்த வெற்றி, அவர்களின் நம்பிக்கையை இன்னும் உயர்த்தி இருக்கும். இந்த வெற்றியின் மூலம் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் அணி.