பரிசு விழவில்லை என கருதி கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் ஆட்டோ டிரைவரின் சோகம்...!
பரிசு கிடைக்கவில்லை எனக்கருதி துண்டு துண்டாகக் கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் பரிசு கிடைத்தது. கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த மன்சூர் அலி என்ற ஆட்டோ டிரைவர் தான் அந்த துரதிர்ஷ்டசாலி ஆவார். துண்டு துண்டான லாட்டரி சீட்டுகளைப் பொறுக்கி எடுத்து பரிசை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மன்சூர் அலி.ஒருவருக்கு அதிர்ஷ்டம் எப்போது கூரையை பிய்த்துக் கொண்டு வரும் என யாருக்கும் தெரியாது. ஆனால் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தபோதும் அதை மயிரிழையில் தவறவிட்டு விட்டுத் தவித்து வருகிறார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் செங்களா என்ற இடத்தை சேர்ந்தவர் மன்சூர் அலி (42). இவர் அருகிலுள்ள நெல்லிக்கட்டை டவுன் பகுதியில் ஆட்டோ ஆட்டோ ஒட்டி வருகிறார். மன்சூர் அலிக்கு லாட்டரி டிக்கெட் எடுக்கும் பழக்கம் உண்டு. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கேரள அரசின் வின் வின் என்ற லாட்டரியில் 3 டிக்கெட்டுகளை வாங்கினார். இதன் முதல் பரிசு ₹60 லட்சம் ஆகும்.
கடந்த 19ம் தேதி இந்த டிக்கெட்டுக்கான குலுக்கல் நடந்தது. ஆனால், தான் டிக்கெட் எடுத்த விவரத்தை மன்சூர் அலி மறந்துவிட்டார். நேற்று சவாரி கிடைக்காமல் ஆட்டோ ஸ்டாண்டில் சும்மா இருக்கும் போது தான் அவருக்கு வின் வின் லாட்டரி டிக்கெட் எடுத்தது ஞாபகத்திற்கு வந்தது. ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து ஒரு பேப்பரை வாங்கி தனக்குப் பரிசு விழுந்துள்ளதா என பார்த்தார். மேலோட்டமாக பார்த்தபோது பரிசு எதுவும் விழவில்லை என கருதினார். இதனால் கோபத்தில் 3 டிக்கெட்டுகளையும் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டார்.ஆனால் அதில் ஒரு டிக்கெட்டுக்கு 2வது பரிசான ₹5 லட்சம் கிடைத்திருந்தது. அந்த விவரம் மன்சூர் அலிக்கு தெரியாது.
ஆனால் மன்சூர் அலிக்கு 2வது பரிசு 5 லட்சம் கிடைத்ததை லாட்டரி ஏஜென்ட் ராமகிருஷ்ணன் கண்டுபிடித்தார். இந்த விவரத்தைக் கூறுவதற்காக ஆட்டோ ஸ்டாண்டுக்கு ராமகிருஷ்ணன் விரைந்தார். மன்சூர் அலியை சந்தித்து 5 லட்சம் பரிசு கிடைத்த விவரத்தைக் கூறினார். அதைக்கேட்ட மன்சூர் அலி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக லாட்டரி டிக்கெட் கிழித்து போட்ட எடுத்துச் சென்று பார்த்தபோது சில துண்டுகள் அங்கேயே கிடந்தன. அப்போது தான் அவருக்கு நிம்மதி வந்தது. துண்டு துண்டாக கிடந்த லாட்டரி சீட்டை பொறுக்கி எடுத்து ஒட்ட வைத்தார். பின் காசர்கோடு மாவட்ட லாட்டரி துறை அதிகாரியைச் சந்தித்து விவரத்தைக் கூறினார்.
ஆனால் கிழித்துப் போட்ட லாட்டரி சீட்டுக்குப் பரிசு கிடைக்க வாய்ப்பு குறைவு என்றும், அந்த தொகுதி எம்எல்ஏவின் அத்தாட்சி கடிதத்துடன் விண்ணப்பித்தால் ஒருவேளை பரிசு கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும் அவர் கூறினார். மேலும் அந்த லாட்டரி டிக்கெட்டில் உள்ள க்யூ ஆர் கோடு கிடைத்தால் அதை வைத்தும் பரிசு கிடைக்க வாய்ப்பு உண்டு என்று அவர் கூறினார். இதையடுத்து பரிசு வாங்குவதற்கான முயற்சியில் மன்சூர் அலி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.