கிரிக்கெட் சங்க வழக்கு.. பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை..

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறையினர் மீண்டும் இன்று(அக்.21) விசாரணை நடத்தினர்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும், மொபைல் மற்றும் தொலைபேசி, இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதன்பின்னர், பல மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு தலைவராக விடுதலை செய்யப்பட்டனர். கடைசியாக, 14 மாத சிறைவாசம் அனுபவித்த மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டார். தமிழகத்தில் அதிமுக, திமுக போல், காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் எதிரெதிர் துருவங்களாக இருந்தன.

தற்போது தே.மா.கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ம.ஜ.க. தலைவர் மெகபூபா முப்தி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து, மத்திய அரசை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் அவர்கள் பரூக் அப்துல்லா வீட்டில் கூட்டம் போட்டு ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 19ம் தேதியன்று, மத்திய அமலாக்கத் துறையினர் தொடர்ந்த பழைய வழக்கில் பரூக் அப்துல்லாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக பரூக் அப்துல்லா இருந்த போது ரூ.43 கோடிக்கு தவறான கணக்குகள் காட்டப்பட்டதாக கூறி, அவர் உள்பட அப்போதைய சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையினரும் அப்துல்லா மீது வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் 19ம் தேதி விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர் மீண்டும் இன்று(அக்.21) விசாரணை நடத்தினர். ஜம்முவில் ராஜ்பாக் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது. இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட ஏஜென்சிகளை கொண்டு, பரூக் அப்துல்லா மீது பழி வாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதன்மூலம், காஷ்மீர் மக்களின் குரலை ஒடுக்கலாம் என்று மத்திய அரசு தவறாக நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

More News >>