முகக் கவசம் அணிய வலியுறுத்திய விமான ஊழியரின் முகத்தில் துப்பிய பெண் பயணி
விமான பயணத்தின் போது முகக்கவசம் அணியுமாறு கூறிய விமான ஊழியரின் முகத்தில் இளம்பெண் துப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சகபயணிகளின் முகத்திற்கு நேராக இருமியும் அட்டகாசம் செய்த அந்த இளம்பெண்ணுக்கு சமூக இணையதளங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது.
கொரோனா நோய் பரவலை தடுக்க மிக முக்கியமான வழியாக முகக்கவசம் கருதப்படுகிறது. பொது இடங்கள் மற்றும் பொது வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக நாடுகள் முழுவதும் வலியுறுத்தி வருகின்றன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாடுகளில் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. நிபந்தனைகள் இவ்வளவு கடுமையாக இருக்கின்ற போதிலும் அதை பின்பற்றாதவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். இந்நிலையில் ஒரு இளம்பெண் விமான பயணத்தின் போது முகக்கவசம் அணியாமல் இருந்ததோடு மட்டுமில்லாமல், விமான ஊழியரின் முகத்தில் துப்பிய சம்பவமும் நடந்துள்ளது.
வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் விமான நிலையத்தில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்தது. பெல்பாஸ்டிலிருந்து எடின்பர்க் நகரத்திற்கு செல்ல ஈசி ஜெட் என்ற தனியார் விமானம் தயாராக இருந்தது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது ஒரு இளம்பெண் முகக்கவசம் அணியாமல் இருக்கையில் அமர்ந்திருந்தார். இதுகுறித்து சக பயணிகள் விமானி ஊழியரிடம் புகார் செய்தனர். இதையடுத்து விமான ஊழியர் அந்த இளம்பெண்ணிடம், முகக்கவசம் அணியாவிட்டால் பயணத்தை தொடர முடியாது என்று கூறினார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், ஊழியர் முகத்தில் துப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சக பயணிகள் அந்த பெண்ணை கண்டித்தனர். அப்போது சில பயணிகளின் அருகே சென்று அவர் இருமவும் செய்தார். 'கொரோனா வந்தாலும் வராவிட்டாலும் எல்லோரும் சாகத்தான் போகிறோம், எதற்கு இப்படி பயப்படுகிறீர்கள்' என்று அந்த இளம்பெண் ஆவேசத்துடன் அலறினார். இதுகுறித்து விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து வெளியே கொண்டு சென்றனர். இந்த காட்சிகளை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த இளம்பெண்ணின் நடவடிக்கைக்கு கடும் சமூக இணையதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.