பழைய இரும்பு வியாபாரம் செய்யும் சினிமா டைரக்டர்.. உலகப்பட விழாவில் சாதித்தும் சங்கடம் தீர வில்லை
உலக திரைப்பட விழாக்களில் பெரிதும் பேசப்பட்ட ஒரு இந்திய சினிமாவின் இயக்குனர் இப்போது பழைய இரும்பு விற்றுக் கொண்டிருக்கிறார்.டிரிபிள் தலாக்' என்ற திரைப்படம் பெங்களூர் லண்டன் மற்றும் வெள்ளிவிழாவில் சிறந்த படங்களில் ஒன்று எனப் பேசப்பட்டது.இந்த படத்தை இயக்கியவர் யாகூப் காதர் குல்வாடி (42), கொரோனா காரணமாகத் தான் முன்பு பார்த்து வந்த பழைய இரும்பு பொருட்களை விற்கும் வியாபாரத்திற்குத் திரும்பிவிட்டார்.
யாகூப் காதர் குல்வாடி தன்னோட 12 வயதிலேயே பழைய இரும்பு பொருட்களைச் சேகரித்து விற்கத் தொடங்கினார்.25 ஆண்டுகள் இந்த வியாபாரத்தைச் செய்து வந்த யாகூப் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்த முடிவு செய்து. கடும் முயற்சிக்குப் பின்னர் விருது பெற்ற இயக்குனர்களான கிரிஷ் காசரவள்ளி மற்றும் நிகில் மஞ்சூ ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்து பயிற்சி பெற்றார்.
அதன் பின்னர் முத்தலாக் நடைமுறையால் ஏற்படும் அவலங்களை எடுத்துக் கூறும் கதையம்சம் கொண்ட டிரிபிள் தலாக் ' என்ற படத்தை இயக்கினார்.இப்படம் பெங்களூரு மற்றும் லண்டன் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்துடன் பல சர்வதேச திரைப்படங்களில் இந்த படம் திரையிடப்பட இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த திட்டம் தடைப்பட்டு விட்டது.இதனால் தனது சினிமாப் பணியைத் தொடர முடியாத யாகூப் மீண்டும் தனது பழைய இரும்பு வியாபாரத்திற்கே திரும்ப வேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நான் தயார் செய்து வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகி விட்டது. சினிமா துறையில் என்னைத் தக்கவைப்பது மிகவும் கடினம் என்பதை உணர்ந்து கொண்டேன். எனது இழப்புகளைச் சமாளிக்க வேறு வழியில்லாமல் எனக்கு நன்கு தெரிந்த பழைய இரும்பு வணிகத்திற்குத் திரும்புவது என்று முடிவு செய்தேன். . எனவே, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, நான் பழைய இரும்பு பொருளை விற்கும் ஒரு கடையை மறுபடியும் தயார் செய்துவிட்டேன் இனி எனது வர்த்தக பயணம் தொடரும் என்று யாகூப் காதர் குல்வாடி தெரிவித்திருக்கிறார்.
முறையான கல்வி இல்லாத போதிலும், யாகூப் காதர் குல்வாடி 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். பழைய பொருட்களைச் சேகரிக்கும் போது கிடைத்த நாளிதழ்கள், புத்தகங்கள் மூலம் தன் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டதாகச் சொல்கிறார் இவர்.தற்போது சூழ்நிலை சிக்கலானது தான் என்றாலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவருக்கு வந்த ஒரு கடிதம் அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
நைஜீரியாவில் நடைபெறவுள்ள அபுஜா சர்வதேச திரைப்பட விழாவில் யாகூப் காதர் குல்வாடியின் படம் மூன்று பிரிவுகளில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாகூப் காதர் குல்வாடி மீண்டு வர ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இந்த கடிதம் .