தேர்தலில் வேட்பாளர்களின் பிரச்சார செலவு 10 சதவீதம் உயர்த்த மத்திய அரசு அனுமதி...!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்திற்கான செலவுத் தொகையை 10% அதிகரித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் வேட்பாளர்களின் பிரச்சார செலவுத் தொகையை உயர்த்த மத்திய அரசு அனுமதி தந்து இருக்கிறது.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார செலவின வரம்பை அதிகரிக்கத் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய பரிந்துரைப்படி வேட்பாளர் செலவினத்தை 10 சதவிகிதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சகம் இதற்காக 1961 தேர்தல் சட்ட விதி முறையில் மாற்றம் செய்துள்ளது.
இதன்படி லோக்சபா தேர்தலில் தற்போது ரூ.70 லட்சமாக இருக்கும் செலவுத் தொகை வரம்பு இனி 77 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட செலவுத் தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேட்பாளர் செலவின வரம்பு சட்டசபைத் தேர்தலுக்கு ரூ.30.80 லட்சமும், லோக்சபா தேர்தலுக்கு ரூ.77 லட்சமாகவும் உயருகிறது.