பிரபாகரன் வாழ்க்கை கதையில் நடிக்க பிரபல நடிகருக்கு அழைப்பு.. மீண்டும் ஒரு பரபரப்பு..
ஹீரோ, வில்லன் என மாறி நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்தாலும் தனக்கான ஹீரோ இமேஜை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும், அவரது படங்களுக்கும் தனி மவுசு இருந்து வருகிறது. எல்லாமே அவர் சிறுக சிறுக சேர்த்த கடும் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரங்கள். இது எல்லாவற்றையும் ஒரேயொரு அறிவிப்பு அவரது திரை வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை 800 என்ற படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தை விஜய் சேதுபதி ஏற்றிருக்கிறார் என்ற அறிவிப்பு தான் விஜய் சேதுபதியை சினிமா வாழ்க்கையைத் தலைகீழாக்கி இருக்கிறது. அவரை நேசித்தவர்களே அவருக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். 800 படத்திலிருந்து உடனடியாக விலக வேண்டும் என்று அவருக்குப் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தன. நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுக்கவே அதை முத்தையா முரளிதரன் புரிந்து கொண்டு தனது வாழ்க்கை படத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதையேற்று அப்படத்திலிருந்து நன்றி வணக்கம் சொல்லி விலகினார் விஜய் சேதுபதி.
ஏற்கனவே 800 படத்திலிருந்து விலகக் கேட்ட கவிஞர் தாமரை உங்கள் தோற்றம் முத்தையா முரளிதரனுக்கானதல்ல அது இன்னொருவருக்கான தோற்றம் என்று விடுதலைப் புலி பிரபாகரன் தோற்றத்துக்கு ஒப்பிட்டிருந்தார். தற்போது அதற்கான அழைப்பு விஜய் சேதுபதிக்கு வந்திருக்கிறது.விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இதை வெப் தொடராக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
வனயுத்தம் என்ற பெயரில் வீரப்பனின் வாழ்க்கை கதை, குப்பி என்ற பெயரிலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கு படங்களை எடுத்து வெளியிட்டவர் ரமேஷ். தற்போது வீரப்பனின் வாழ்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். அடுத்து விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்.பிரபாகரனாக நடிக்க விஜய் சேதுபதி தோற்றம் பொருத்தமானதாக இருக்கும் எனக் கூறியுள்ள இயக்குனர் ரமேஷ் அதுபற்றி விஜய் சேதுபதியிடம் பேச உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி இதை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.