முத்தலாக் எதிர்ப்பு போராட்டம் நடத்திய ஷயாரா பானுவுக்கு உத்தரகாண்ட் அரசில் முக்கிய பதவி...!

முத்தலாக் முறைக்கு எதிராக இந்தியாவில் போராட்டத்தைத் தொடங்கிய ஷயரா பானுவுக்கு உத்தரகாண்ட அரசு அமைச்சர் பதவிக்குச் சமமான பதவியை வழங்கியுள்ளது.முத்தலாக் என்பது இஸ்லாமியச் சமூகத்தில் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் விவாகரத்திற்கான வழிமுறையாகும். இதன்படி ஓர் இஸ்லாமிய ஆண் தனது மனைவியிடம் தலாக் (விவாகரத்து என்பதற்கான அரபிச் சொல்) எனும் அரேபிய வார்த்தையை மூன்று முறை தெரிவிப்பதின் மூலம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றவராகி விடுவார். பல முஸ்லிம் நாடுகளில் இந்த முத்தலாக் முறை தடை செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஷயரா பானு என்பவர் முத்தலாக் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.கடந்த 2014ல் ஷயரா பானுவின் கணவர் ஸ்பீட் போஸ்ட் மூலம் அவரை முத்தலாக் செய்தார்.

இதையடுத்து 4 மாதங்களுக்குப் பின்னர் முத்தலாக் சட்டத்தைத் தடை செய்யக்கோரி இவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஷயரா பானுவின் இந்த மனு தான் இந்தியாவில் முத்தலாக் தடை சட்டம் வருவதற்குக் காரணமாக அமைந்தது. கடந்த வருடம் இந்தியாவில் முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புக்கிடையே முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் ஷயரா பானு பாஜகவில் சேர்ந்தார். இந்நிலையில் இவருக்கு உத்தரகாண்ட் அரசில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. ஷயராவுக்கு மாநில மகளிர் ஆணைய துணைத் தலைவர் பதவி வழங்கி உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது இணை அமைச்சருக்குச் சமமான பதவியாகும். இந்த தகவலை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் செய்தி தொடர்பாளர் தர்ஷன் சிங் ராவத் இன்று தெரிவித்தார். இவருடன் ஜோதி ஷா மற்றும் புஷ்பா பாஸ்வான் ஆகியோருக்கும் மாநில மகளிர் ஆணையத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பதவிகள் நீண்டகாலமாக காலியாக கிடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நவராத்திரி சமயத்தில் இது உத்தரகாண்ட் மாநில பெண்களுக்கு முதல்வர் அளித்துள்ள ஒரு பரிசாகும் என்று தர்ஷன் சிங் ராவத் கூறினார்.

More News >>