குற்றம் நிரூபணமாகும் வரை பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் பெயர், விவரங்களை வெளியிடக்கூடாது...!
குற்றம் நிரூபணமாகும் வரை பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்படுவர்களின் பெயர், விவரங்களை வெளியிடக்கூடாது என்று மத்திய மனித உரிமை ஆணையம் மத்திய அரசுக்குச் சிபாரிசு செய்துள்ளது.பாலியல் வன்புணர்வுக்கு இரையாகுபவர்களின் பெயர், விவரங்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். பத்திரிகைகளிலோ, டிவியிலோ அவர்களை அடையாளம் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்களையோ, புகைப்படங்களையோ வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் குறித்த விவரங்களையும் அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபணமாகும் வரை வெளியிடக்கூடாது என்று மத்திய மனித உரிமை ஆணையம் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது.நாட்டில் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும் அதே வேளையில், பொய்யான புகார் கொடுப்பதும் அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பழிவாங்கும் நோக்கத்தில் சிலர் மீது பொய்யான பலாத்கார புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய மனித உரிமை ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதையடுத்து மத்திய மனித உரிமை ஆணையமும், பெண்கள் மேம்பாட்டு மையமும் சேர்ந்து ஒரு ஆய்வு நடத்தின. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பது: பலாத்கார வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறிப்பாகச் சிறுவர்கள் நிரபராதிகள் எனப் பின்னர் நிரூபணமாகும் போது அவருடைய வாழ்க்கையே சின்னாபின்னமாகி இருக்கும்.2012ம் ஆண்டு போக்சோ சட்டப்படி 18 வயதுக்குக் குறைவான சிறுமிகளுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றமாகும். ஆனால் தற்போதைய சமூக சூழ்நிலையில் இது சாத்தியமில்லை. பொய்யான புகார்கள் கூறப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் இது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். டெல்லியில் வயதுக்கு வந்த மற்றும் வயதுக்கு வராத 70 குற்றவாளிகளிடம் பேசியதில் அவர்களில் பெரும்பாலானோருக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. அவர்கள் காதலித்தும் வந்துள்ளனர். கடைசியில் விவரம் தெரிந்த பின்னர் அந்த பெண்ணின் உறவினர்கள் இவர்களுக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளனர். இருவரும் விருப்பப்பட்டுத் தான் உறவு கொண்டிருப்பார்கள்.
இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரியவரும்போது அதை ஒரு குற்றமாகக் கருதும் நிலை ஏற்படுகிறது. சட்டத்தைக் குறித்துத் தெரியாமல் வயதுக்கு வராத சிறுமிகளுடன் காதலில் ஏற்படுவதும் பலருக்குச் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எனவே பலாத்கார புகார்களில் சிக்குபவர்களின் பெயர், விபரங்களை அவர்கள் குற்றவாளிகள் என நிரூபணமாகும் வரை வெளியிடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.