பாஜகவில் சேர ரூ.1 கோடி பேரம் - போராட்டத் தலைவர் அதிர்ச்சி தகவல்
பாஜக-வில் சேருவதற்கு தமக்கு ரூ. 1 கோடி பேரம் பேசப்பட்டதாக குஜராத்தில் இடஒதுக்கீடு போராட்டக்காரரும், படேல் சமூகத் தலைவர்களில் ஒருவருமான, ஹர்திக் படேலுக்கு நெருக்கமானவருமான நரேந்திர படேல் பரபரப்புக் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைகளுக்கு 2017 டிசம்பருக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால், இப்போதுவரை குஜராத் மாநிலத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
மோடி ஆட்சியில் குஜராத் மாநில தலைமைச் செயலாளராக இருந்தவர்தான், இன்றைய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி. அவர், கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்திற்கும், குஜராத்திற்கும் தேர்தல் தேதியை அறிவிக்கப்போவதாக கூறியிருந்தார்.
ஆனால், இமாச்சலப் பிரதேசத்திற்கு தேர்தல் தேதியை அறிவித்த ஜோதி, குஜராத்துக்கு தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் தேர்தல் தயாரிப்புக்கு போதிய அவகாசம் வழங்கக் கூடாது என்பத ற்காகவும், ஆளும் பாஜக அரசு குஜராத்தில் கடைசி நேர சலுகைகளை அறிவிப்பதற்கு, நன்னடத்தை விதிகள் தடையாகி விடக்கூடாது என்பதற்காகவுமே இவ்வாறு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில்தான் திங்களன்று அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த படேல் சமூகத் தலைவர் நரேந்திர படேல், பாஜக தன்னிடம் ரூ. 1 கோடி தருவதாக சொல்லி பேரம்பேசியதை பகிரங்கப்படுத்தி இருக்கிறார். தனக்கு முன்பணமாக தரப்பட்டரூ. 10 லட்சம் பணத்தையும் செய்தியாளர்கள் முன்னிலையில் காட்டிய நரேந்திர படேல், பாஜக-வின் சுயரூபத்தை அம்பலப்படுத்துவதற்காக, அக்கட்சியில் சேருவது போல நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
படேல் போராட்டக் குழுவின் மற்றொரு நிர்வாகியான வருண் படேல்தான், பாஜக-வில் சேருவதற்கான பேரத்தை தன்னிடம் நடத்தினார் என்றும் நரேந்திர படேல் உண்மையை போட்டு உடைத்துள்ளார். இது குஜராத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.