ரூ.1 கோடி சம்பளம் போதவில்லை... பழைய வேலைக்கே செல்லும் இங்கிலாந்து பிரதமர்?!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் பதவி விலக இருப்பதாக அவரின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்பி தகவல் தெரிவித்துள்ளார். பதவி விலகலுக்கு காரணமாக போரிஸ் கூறியதாக அந்த எம்பி கூறிய விஷயம் சம்பளம். போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் பதவியில் இருந்து வரும் சம்பளம் போதவில்லை என்பதால் அவர் பதவி விலக இருக்கிறார் என அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தனது பழைய வேலைக்கே, திரும்ப இருக்கிறார் என்று செய்திகள் கசிகின்றன.
பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆண்டிற்கு 1 லட்சத்து 50,402 யூரோ சம்பளம் வாங்குகிறார். இந்திய மதிப்பில் இது ரூ.1 கோடியே 30 லட்சம். இந்த சம்பளம் தான் போரிஸுக்கு போதவில்லை. மேலும் இதற்கு முந்தைய பணியில் போரிஸ் இதைவிட அதிக சம்பளம் வாங்கினார். தற்போது போரிஸ் ஜான்சனுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் சிலர் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பதால் அவர்களின் செலவை போரிஸ் கவனித்து கொள்ள வேண்டி இருக்கிறது. மேலும் விவாகரத்தான முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டி இருப்பதால், தற்போது கடும் பண நெருக்கடியில் போரிஸ் இருக்கிறார்.
இதனால் தான் அடுத்த 6 மாதத்தில் பதவி விலக தீர்மானித்துள்ளார். அரசியலில் இருப்பதற்கு முன்பாக போரிஸ் பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது, ஆண்டிற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் யூரோ சம்பளம் வாங்கி வந்தார். இதுபோக, சொற்பொழிவாற்றுவதன் மூலம், மாதத்திற்கு மேலும் 1 லட்சத்து 60 ஆயிரம் யூரோ சம்பாதித்து வந்துள்ளார். இந்தக் காரணங்களில்தான் மீண்டும் பழைய வேலைக்குச் செல்ல தீர்மானித்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.