கேரளாவில் விரைவில் அவசர சட்டம் சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பினால் 5 வருடம் சிறை

கேரளாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் தனிப்பட்ட நபருக்கு எதிராக அவதூறு பரப்பினாலோ, மிரட்டல் விடுத்தாலோ 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக இணையதளங்களில் தனிநபர் சுதந்திரம் மீறப்படுவதாக பரவலாக புகார் கூறப்பட்டு வருகிறது. இதுபோன்ற சமூக வலைதளங்களில் யார் மீதும் என்ன வேண்டுமானாலும் அவதூறு பரப்பலாம் என்ற நிலை உள்ளது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து 2000ம் ஆண்டு ஐடி சட்டத்தின் 66-ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறி உச்சநீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்தது.

இந்நிலையில் கேரளாவில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களைப் பரப்புவது மற்றும் மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அவசர சட்டம் கொண்டு வர இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினால் அவர்களுக்கு 5 வருடம் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இந்த அவசர சட்டத்தை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் அளித்தால் உடனடியாக இந்த சட்டம் கேரளாவில் அமலுக்கு வரும்.

More News >>