107 ரன்னில் சுருண்டது ஆஸி. - 322 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. இமாலய வெற்றி
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முறையே இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் டீன் எல்கர் 141 மற்றும் டி வில்லியர்ஸின் 64 ரன்கள் உதவியுடன் 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகப்பட்சமாக பான்கிராஃப்ட் 77 ரன்களும், டிம் பெய்னே 34 ரன்களும், டேவிட் வார்னர் 30 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்னே மோர்கல் மற்றும் ரபாடா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 56 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 373 ரன்கள் குவித்தது. மார்க்ரம் 84 ரன்களும், டி வில்லியர்ஸ் 63 ரன்களும், குவிண்டன் டி காக் 65 ரன்களும் எடுத்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த வெர்னர் பிளாந்தர் 52 ரன்கள் எடுத்தார். ஆஸி தரப்பில் கம்மின்ஸ், ஹசில்வுட், லாதன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய, ஆஸ்திரேலியா அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக டேவிட் வார்னர் 32 ரன்களும், பேன்கிராஃப்ட் 26 ரன்களும், மிட்செல் மார்ஷ் 16 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கத்தையே தாண்டவில்லை.
அபாரமாக பந்துவீசிய மோர்னே மோர்கல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், தென் ஆப்பிரிக்க அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய மோர்னே மோர்கல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com