48 மணி நேரம் இலவசமாக பார்க்கலாம் நெட்பிளிக்ஸ் புதிய சலுகை.
ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி 48 மணிநேரம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஓடிடி தளம் என்றால் அதிகமாக யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது சர்வசாதாரணமாக டிவிக்களிலும், செல்போன்களிலும் இந்த ஓடிடி தளங்களில் படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது அதிகரித்து விட்டது. கொரோனா காலத்தில் இந்த ஓடிடி தளங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. தற்போது இந்த கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பல படங்களும் இந்த தளங்களில் தான் ரிலீஸ் ஆகி வருகிறது. பல ஓடிடி தளங்கள் தற்போது வந்துவிட்ட போதிலும் அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியவை தான் முன்னிலையில் உள்ளது. இவற்றுக்குத் தான் வாடிக்கையாளர்களும் அதிகமாக உள்ளனர்.தொடக்கத்தில் இந்த ஓடிடி தளங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு மாதம் வரை இலவசமாக பயன்படுத்த அனுமதி அளித்திருந்தது. அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ் உள்பட தளங்கள் இந்த வாய்ப்பை அளித்திருந்தன.
ஒரு மாதத்திற்கு பின்னர் தேவைப்பட்டால் தொடரலாம். ஆனால் ஒரு மாத இலவச சலுகை பெறும்போது வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கு பின்னர் தொடர விரும்பினால் மாதா மாதமோ அல்லது வருடத்திற்கோ தானாகவே வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணம் சென்றுவிடும். இதற்கிடையே அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியவை தங்களது 1 மாத இலவச சலுகையை ஏற்கனவே நிறுத்திவிட்டன. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக 48 மணி நேர இலவச சலுகையை அறிவித்துள்ளது. இதில் வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள் கேட்கப்படாது. 2 நாட்கள் இலவசமாக வீடியோக்களை பார்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு தேவைப்பட்டால் மட்டும் தொடரலாம். டிசம்பர் 4ம் தேதிக்கு பின்னர் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.