நடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.
சமீபத்தில் மரணமடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி நடிகை மேக்னாராஜுக்கு இன்று பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கும் பிரபல நடிகை மேக்னா ராஜுக்கும் கடந்த இரு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் வைத்து சிரஞ்சீவி சர்ஜா மரணமடைந்தார். இவரது இந்த திடீர் மறைவு கன்னட சினிமா உலகினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி மரணம் அடையும் போது அவரது மனைவி மேக்னாராஜ் கர்ப்பிணியாக இருந்தார்.தனது கணவரின் திடீர் மரணத்தை தாங்க முடியாமல் மேக்னாராஜ் தவித்து வந்தார். பிறக்கப் போகும் குழந்தையைக் கூட பார்க்க முடியாமல் கணவர் இறந்த சோகத்தில் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் மேக்னாராஜுக்கு பேபி ஷவர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான துருவா சர்ஜா தான் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் துருவா சர்ஜா பிறக்கப்போகும் தனது அண்ணனின் குழந்தைக்காக 10 லட்சத்தில் செய்யப்பட்ட ஒரு வெள்ளி தொட்டிலை மேக்னாராஜுக்கு சர்ப்ரைஸ் பரிசாக கொடுத்து அசத்தினார். இந்நிலையில் இன்று காலை மேக்னாராஜுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் அந்த குழந்தையை துருவா சர்ஜா வைத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.