பெண்களின் திருமண வயது 21... மத்திய அரசு விரைவில் அறிவிப்பு...!

பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கருதப்படுகிறது.தற்போது இந்தியாவில் ஆண்களின் திருமண வயது 21 ஆகவும், பெண்களின் திருமண வயது 18 ஆகவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த 1978ல் தான் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. அதற்கு முன்பு ஆண்களின் திருமண வயது 18 ஆகவும் பெண்களின் திருமண வயது 15 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று சட்ட ஆணையமும் தேசிய மனித உரிமை ஆணையமும் மத்திய அரசிடம் சிபாரிசு செய்தது. இது தொடர்பாக ஆலோசிக்க ஜெயா ஜெட்லி தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு நியமித்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இந்த குழுவிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஜெயா ஜெட்லி தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அறிக்கை கிடைத்தவுடன் மத்திய அரசு பெண்களின் புதிய திருமண வயது குறித்த அறிவிப்பை வெளியிடும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி பெண்களின் திருமண வயது 21 ஆக உயரும். இந்தியாவில் 1929 முதல் குழந்தை திருமண தடுப்பு சட்டம் அமலில் உள்ளது. 2006ல் கொண்டுவரப்பட்ட குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்படி சட்டத்தை மீறுபவர்களுக்கு 2 வருடம் சிறைத் தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். ஐநா சபை சமீபத்தில் வெளியிட்ட ஒரு கணக்கின்படி இந்தியாவில் 30 சதவீதம் பெண்களின் திருமணம் 18 வயதுக்கு முன்பே நடைபெறுவது தெரியவந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>