பீகாரில் ஆட்சி அமைத்தால் இலவச கொரோனா தடுப்பூசி.. பாஜக தேர்தல் அறிக்கையில் தகவல்
பீகாரில் ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத்தில் 71 தொகுதிகளுக்கும், 2வது கட்டத்தில் 94 தொகுதிகளுக்கும், 3வது கட்டத்தில் 78 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடைபெற உள்ள 71 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் பீகாரில் உள்ள முக்கிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை எந்த நாட்டினாலும் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதற்கு முன்பே கொரோனா தடுப்பூசியை முக்கிய ஆயுதமாக பாஜக தனது தேர்தல் அறிக்கையில் பயன்படுத்தியுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தால் 19 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் பீகாரில் ஒவ்வொருவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 லட்சம் ஆசிரியர் பணியிடம், சுகாதாரத் துறையில் 1 லட்சம் தொழில், பீகாரை ஐடி 'ஹப்'பாக மாற்றும் போது 5 லட்சம் பேருக்குத் தொழில், விவசாய 'ஹப்'பாக மாற்றப்பட்ட பின்னர் 10 லட்சம் பேருக்குத் தொழில் கிடைக்கும். 1 கோடி பெண்களுக்குச் சுயதொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். 30 லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும். இவ்வாறு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒரு பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு வேலை கொடுப்போம் என்று கூறினார். ஆனால் அதை நிதீஷ் குமார் யாதவ் கிண்டலடித்தார். 10 லட்சம் பேருக்கு எங்கிருந்து இவர் சம்பளத்தைக் கொடுப்பார் என்று நிதீஷ் குமார் கூறினார். ஆனால் தற்போது பாஜக தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.