விவசாய சீர்திருத்த சட்டங்களை நிராகரிக்க ராஜஸ்தான் முடிவு...!
மத்திய அரசின் விவசாய சீர்திருத்தச் சட்டங்களை நிராகரிக்க ராஜஸ்தான் முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்தார்.மத்திய அரசின் விவசாய சீர்திருத்தச் சட்டங்களை நிறைவேற்றப் போவதில்லை எனச் சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சட்டங்களை நிராகரிக்கும் இரண்டாவது மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் , பஞ்சாப் மாநிலத்தைப் போலவே ராஜஸ்தான் மாநில அமைச்சரவை மத்திய அரசின் விவசாயத் திட்டங்களை நிராகரிப்பது என்று முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் விவசாய சட்டங்களை நிராகரிக்கும் மசோதாக்களும் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அத்துடன் மத்திய அரசின் விவசாயத் துறை திட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் வேளாண் விளைபொருள், இதில் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று மத்திய அரசு சட்டம் குறிப்பிடத் தவறி விட்டது. அத்துடன் விவசாய விளைபொருள்களை இருப்பு வைப்பதற்கான உயர்ந்த பட்ச அளவையும் மத்திய அரசு அகற்றி விட்டது. இதன் காரணமாகக் கருப்புச் சந்தை, பதுக்கல் ஆகியவை அதிகமாகும்.
எனவே இவற்றை எதிர்த்து மாநில அரசு மசோதாக்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மாநில அமைச்சரவை முடிவுகளை டிவிட்டரிலும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். . குடியுரிமை திருத்தச் சட்டங்கள் விரைவில் அமல் செய்யப்படும் என்று பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருப்பதையும் கெலாட் கடுமையாக விமர்சித்தார் கூறினார். கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத சூழ்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்ட பிரச்சனையை மீண்டும் எழுப்புவது மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.