பீகாருக்கு மட்டும் தான் இலவச கொரோனா தடுப்பூசியா? பாஜகவுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்...!
பீகாரில் ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி, சசிதரூர் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பொதுவாகத் தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கம். தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அதை நம்பி மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் பீகாரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில், ஆட்சி அமைத்தால் பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஆர்ஜேடி உள்படக் கட்சியினரும், ராகுல் காந்தி, சசி தரூர், உமர் அப்துல்லா, பிரியங்கா சதுர்வேதி உள்படத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி தனது டிவிட்டரில் கூறுகையில், மத்திய அரசு கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசியும், போலி வாக்குறுதிகளும் உங்களுக்கு எப்போது கிடைக்கும் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் தயவுசெய்து மாநிலச் சட்டசபைத் தேர்தலின் தேதியைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஜேடி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் அது நம்முடைய நாட்டுக்குச் சொந்தமானதாகும். இதில் பாஜக உரிமை கொண்டாட முடியாது. நோய் குறித்தும், மரணத்தைக் குறித்தும் பாஜக பீதியைக் கிளப்புகிறது. வேறு வழியில்லை என்பதால் தான் கொரோனா தடுப்பூசியை அரசியல் ரீதியாக பாஜக பயன்படுகிறது. பீகார் மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள். அவர்கள் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பீகார் தேர்தலைச் சந்திக்க பாஜகவுக்குத் தைரியம் இல்லை. அதனால் தான் இதுபோன்ற தேர்தல் வாக்குறுதியை அவர்கள் அளித்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள், நான் உங்களுக்குத் தடுப்பூசி தருகிறேன், எவ்வளவு மோசமான வாக்குறுதி இது என்று சசிதரூர் கூறியுள்ளார்.