விபரீத விளைவுகளுக்கு யார் பொறுப்பு - ஸ்டெர்லைட்டுக்காக கொதிக்கும் ஜி.வி.பிரகாஷ்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு கால ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில் அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கியுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகவும், புற்றுநோய் தாக்குவதாகவும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை முற்றிலும் மூடக்கோரியும் சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த 22 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டம் தற்போது உச்சநிலைக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ”நடந்து முடிந்த பின்னால் எதையும் தடுக்க முடியாது, என்பதை உணர மறுத்தால் “விபரீத” விளைவுகளுக்கு யார் பொறுப்பு..? மக்களே அரசு மக்களுக்காகவே அரசு” என்று கூறியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் கடந்த சில காலங்களாக மக்கள் போராட்டங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், கன்னியாகுமரியில் நடந்த மீனவர் போராட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் போராட்டம் என அனைத்து மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com