விக்கெட் எடுத்ததும் ஓடுவது ஏன்... ரகசியத்தை சொன்ன இம்ரான் தாஹீர்!
தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர ஸ்பின்னர் இம்ரான் தாஹீர். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சில வருடங்களாக விளையாடி வருகிறார். களத்தில் விக்கெட் எடுத்தால் சில தூரம் ஓடுவது இம்ரான் தாஹீரின் டிரேட் மார்க் ஸ்டைல். இது ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒன்று. இதை வைத்து சிலர் பல முறை மீம்ஸ் போன்று கிண்டல் செய்வது உண்டு. ஆனாலும், தனது டிரேட் மார்க் ஸ்டைலை விடவில்லை தாஹீர். இதற்கிடையே, சமீபத்தில் தாஹீரிடம் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி கண்டார்.
அப்போது விக்கெட் எடுத்ததும் ஓடுவது ஏன் என்ற கேள்வியை தாஹீரிடம் முன்வைத்தார் அஸ்வின். அதற்கு பதிலளித்த தாஹீர், ``இதை பேஷன் என்று சொல்லலாம். இந்த செயல் எங்கிருந்து எப்படி எனக்கு வந்தது என்பது தெரியவில்லை. முதல்முறையாக, 15 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய போது விக்கெட் எடுத்த சந்தோஷத்தில் முதல்முறையாக ஓடினேன். ஓடினேன்... ஓடினேன் மைதானத்திற்கு வெளியே இருந்த சாலை வரை ஓடி போய் நின்றேன்.
பின்னர் அங்கிருந்து நடந்து வந்தேன். அங்கிருந்தவர்கள் எனது அந்த செயலை பார்த்து சிரித்தனர். ஆனால், எனக்கு அதை பற்றி கவலையில்லை. தொடர்ந்து அப்படி செய்ய தோன்றியது, மற்றவர்கள் வேடிக்கையாக பார்த்தாலும்" எனக் கூறியிருக்கிறார்.