ரஷ்ய தடுப்பு மருந்தை 100 இந்தியர்களிடம் பரிசோதிக்க அனுமதி..!
ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்தை 100 இந்தியர்களிடம் பரிசோதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்திருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் நாடுகளில்தான் அதிகமானோருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. தற்போது சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மருத்துவ நிபுணர்கள், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்ய மருத்துவ விஞ்ஞானிகள், ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறது. 2வது கட்டத்தில் இந்தியாவில் 100 பேருக்கு இந்த மருந்தை அளித்துப் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ரஷ்ய நிறுவனத்திற்கு இதற்கான அனுமதியை, மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை வழங்கியுள்ளது.
இது குறித்து ஸ்புட்னிக் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், தடுப்பு மருந்து 2ம் கட்டமாக 100 இந்தியர்களிடம் பரிசோதிக்கப்படும். இந்தியாவில் டாக்டர் ரெட்டி லேபரேட்டரீஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த பரிசோதனையை மேற்கொள்ளும். இதற்காக 100 பேரை அந்த நிறுவனமே தேர்வு செய்து, இடம், நேரம் போன்றவற்றையும் முடிவு செய்யும். 2ம் கட்ட சோதனையில் திருப்திகரமாக முடிவு ஏற்பட்டால் 3ம் கட்டத்தில் 1400 பேருக்குச் சோதனை செய்யப்படும். தடுப்பு மருந்து வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு விட்டதால், இந்தியாவுக்கு அதிக அளவில் மருந்து தரப்படுவதுடன், இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறது.