இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்காவிட்டால் வேறுபடம் இயக்க முடிவு.. பிரமாண்ட இயக்குனர் எச்சரிக்கை..
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. ஒரு வழியாக ஷூட்டிங் தொடங்கியது. அவ்வப்போது இடை வெளிவிட்டுப் படப்பிடிப்பு நடந்தது. திடீரென்று சொன்ன பட்ஜெட்டை விட கூடுதலாகச் செலவு செய்வதாக இயக்குனர் மீது புகார் சொன்ன பட நிறுவனம் படப்பிடிப்பை நிறுத்தியது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சமரசம் ஏற்பட்டு ஷூட்டிங் தொடங்கியது.
சில மாதங்களுக்கு முன் இந்தியன்2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டது, இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் படப் பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா ஊரடங்கால் முற்றிலுமாக அனைத்து படப்பிடிப்புகளும் அடுத்த 5 மாதம் நிறுத்தப்பட்டது.
தற்போது அரசு படப்பிடிப்பு கள் நடத்த அனுமதி வழங்கிய நிலையில் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவது குறித்துத் தயாரிப்பு தரப்பிலிருந்து அதற்கான பணிகள் எதுவும் தொடங்கவில்லை என்று தெரிகிறது.படப்பிடிப்பைத் தொடங்க ஷங்கர் காத்திருக்கிறார். ஆனால் அதற்கான அறிகுறி எதுவும் இல்லாததால் ஷங்கர் அப்செட்டில் இருக்கிறார். தயாரிப்பு நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடும்படியான ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார் ஷங்கர். இதுபற்றி கூறப்படுவதாவது: திரைப்பட படப்பிடிப்புகளை அரசாங்கம் அனுமதித்தவுடன் ஷங்கரும் அவரது குழுவினரும் இந்தியன் 2 படப்பிடிப்பை பட நிறுவனம் மீண்டும் தொடங்குவார்கள் என்று நம்பினர். ஆனால் இப்போது, ஊரடங்கின் விளைவாக ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யத் தயாரிப்பு செலவை மேலும் குறைக்கத் தயாரிப்பு நிறுவனம் எண்ணுகிறது.
ஆனால், ஏற்கனவே தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குனருக்கும் ஏற்பட்ட முதல் கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு பட்ஜெட்டை 400 கோடியிலிருந்து 220 கோடியாகக் குறைத்துள்ள ஷங்கர், மேலும் பட்ஜெட்டை குறைக்க முடியாது எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் பட நிறுவனம் மவுனம் சாதித்து வருகிறது.இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார். முன்னதாக இந்தியன் 2 படத்திற்கான வேலைகளை முடித்த பின்னர் இப்படத்தைத் தொடங்க எண்ணியிருந்தார். தற்போதைய முட்டுக்கட்டைகளைப் பார்த்த பிறகு இந்தியன் 2 இப்போது தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் லோகேஷ் கனகராஜ் படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பிரபல புகைப்படக் கலைஞர் வெங்கெட்ராம் மேக்கப் அணிந்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.
ஷங்கரும் இது குறித்து லைகா நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்காவிட்டால் வேறு படத்தை இயக்கவிருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து மீண்டும் பட நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது அதை தீர்த்து வைப்பதற்கான முயற்சியும் நடக்கிறது.