மனீஷின் மரண அடி ! சங்கரின் சரவெடி! இன்னும் ஆட்டத்தில் நீடிக்கும் ஹைதராபாத்!
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (22-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லாமல் அரங்கேறியது. டாஸ் வென்ற சன் ரைசஸ் ஹைதராபாத் அணி சற்று வித்தியாசமாகப் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இந்த சீசனில் சேஸிங்கில் வெற்றி பெறாத ஹைதராபாத் பந்து வீச்சைத் தேர்வு செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் உத்தப்பா மெதுவாக இன்னிங்சை தொடங்கினர்.
ஹைதராபாத் அணியில் காயத்தால் விலகிய வில்லியம்சனுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான உத்தப்பாவை ரன் அவுட்டாக்கி ஓட விட்டார் ஹேல்டர்.
பின்னர் களமிறங்கிய சாம்சன் எப்போதும் போல 36 ரன்களை விளாசி ஹோல்டர் ஓவரில் போல்டாகி வெளியேறினார். ஒருபுறம் ரன் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்த பென் ஸ்டோக்ஸ், நிறைய கேட்ச் வாய்ப்புகள் கொடுத்தும் அதனை ஹைதராபாத் வீரர்கள் தவறவிட்டனர். ஒருவழியாக ரஷீத்கான், ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.
கடந்த போட்டியில் அசத்திய பட்லர் இந்த போட்டியில் சீக்கிரமே நடையைக் கட்ட, பின் வரிசையில் இறங்கிய பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சாளர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
ராஜஸ்தான் அணி முட்டி மோதி இருபது ஓவர் முடிவில்154 /6 ரன்களை சேர்த்தது. ஓப்பனிங் செய்ய பென் ஸ்டோக்ஸ் தடுமாறுவது தெரிந்தும், தொடர்ந்து அவரை அந்த இடத்தில் இறக்குவது ஸ்மித்ன் அனுபவமின்மையைக் காட்டுகிறது. ஸ்டோக்ஸ்க்கு பதில் பட்லரை ஓப்பனிங் ஆட வைத்திருக்கலாம்.
ஹைதராபாத் அணி இருபது ஓவர் முடிவில் 155 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால் பவர்பிளேயில் இரண்டு ஓவர்களை வீசிய ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர், ஹைதராபாத் அணியின் நட்சத்திரங்களான வார்னர் மற்றும் பேர்ஸ்ட்டோவை முறையே 4 மற்றும் 10 ரன்களில் வெளியேற்றி அதிர்ச்சியளித்தார்.
தொடக்கத்திலேயே நிலைகுலைந்தது ஹைதராபாத் அணி. தொடர்ந்து ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்த சீசனில் சொதப்பி வந்தனர். மேலும் வில்லியம்சன் இல்லாதது பெருத்த பின்னடைவு, இதனால் ஹைதராபாத் அணியின் வெற்றி கேள்விக் குறியானது.
ஆனால் மனீஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் இருவரும் இணைந்து மெதுவாக ஆட்டத்தை ஹைதராபாத் அணியின் பக்கம் திருப்பினர். ராஜஸ்தான் வீரர்களால் இந்த இணையைக் கடைசி வரை பிரிக்க முடியாமல் திணறினர்.இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை 140 ரன்களை சேர்த்து சாதனை படைத்தது. மனீஷ் பாண்டே 47 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சர் என 83 ரன்களை விளாசி மிரட்டினார்.
மறுபுறம் சரியாக பார்ட்னர் ஷிப் கொடுத்த தமிழக வீரர் விஜய் சங்கர் 51 பந்தில் 6 பவுண்டரிகளை விளாசி 52 ரன்களை சேர்த்து தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.ஹைதராபாத் அணி 11 பந்துகள் மீதம் உள்ள நிலையில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது ஹைதராபாத் அணி. அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மனீஷ் பாண்டே ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.