ரேஷன் கடைக்கு சென்று வரிசையில் நின்று அரிசி வாங்கிய முன்னாள் அமைச்சர்.
கேரள முன்னாள் அமைச்சரான பந்தளம் சுதாகரன் ரேஷன் கடைக்கு சென்று வரிசையில் நின்று அரிசி மற்றும் உணவுப் பொருட்களை வாங்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த போட்டோவை கேரள உணவுத்துறை அமைச்சரான திலோத்தமன் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து பந்தளம் சுதாகரனுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். ரேஷனில் பொருட்கள் வாங்குவதை இப்போதும் கவுரவ குறைச்சலாக நினைப்பவர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான பந்தளம் சுதாகரனுக்கு அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. நேரம் கிடைக்கும்போது இவர் தன்னுடைய ரேஷன் கார்டை எடுத்து கடைக்கு சென்று வரிசையில் நின்று அரிசி மற்றும் பொருட்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கத்தில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், 1978ல் காங்கிரஸ் மாணவர் சங்க துணை தலைவர் மற்றும் பொது செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். இதன் பின்னர் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர், பொதுச்செயலாளர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 3 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த இவர், கருணாகரன் மற்றும் ஏ.கே.அந்தோணியின் அமைச்சரவையில் 1991 முதல் 96 வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கலால், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். இவரது சொந்த ஊர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் என்றாலும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள சாஸ்தமங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முன்னாள் அமைச்சராக இருந்தாலும் ரேஷன் கடையில் அரிசி மற்றும் பொருட்கள் வாங்குவதை இவர் நிறுத்தவில்லை. நேரம் கிடைக்கும்போது நடந்து சென்று வீட்டுக்கு அருகே உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது இவரது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் வழக்கம் போல ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். அப்போது அங்கிருந்த ஒருவர் அதை தனது செல்போனில் போட்டோ எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப் உட்பட சமூக இணையதளங்களில் பகிர்ந்தார். நிமிட நேரத்தில் இந்த போட்டோ வைரலானது. இது குறித்து அறிந்த கேரள உணவுத்துறை அமைச்சர் திலோத்தமன், அந்த புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக்கிலும் பகிர்ந்தார். மேலும் பந்தளம் சுதாகரனின் இந்த செயல் பெரிதும் பாராட்டுக்குரியது என்றும், இதன் மூலம் கேரள பொது விநியோகத்திற்கு ஒரு மரியாதை கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான மணியன் பிள்ளை ராஜு என்பவர் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கியது பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.