விஜயதசமியன்று பள்ளிகளில் அட்மிஷன் அரசு அறிவிப்பு...!
வரும் விஜயதசமியன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக மாணவ மாணவிகளைச் சேர்த்துக் கொள்ளலாம் கொள்ளலாம் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கொரானா ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் எட்டு மாதங்களுக்கு மேலாகியும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் புதிதாக மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக விஜயதசமியன்று தான் புதிதாகக் கல்வி பயிலும் குழந்தைகளைப் பெற்றவர்கள் பள்ளியில் சேர்ப்பது நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது இதைக் கருத்தில் கொண்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்குத் தொடக்கக்கல்வி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமியன்று குழந்தைகளை முதன்முதலாகப் பள்ளியில் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகிறது எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வருகிற 26-ந்தேதி விஜயதசமியன்று புதிதாக கல்வி பயிலத் தொடங்கும் மாணவ மாணவிகளைப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தலாம்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் வகையில் ஊர் பொது இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்தும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தியும், தெரியப்படுத்த வேண்டும்.அரசுப் பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளைச் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதுடன் அன்றே குழந்தைகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.