நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்பை சிக்கவைத்த இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு விருது.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகர் திலீப்பை சிக்க வைத்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு, சிறந்த போலீஸ் அதிகாரிக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு இரவில் காரில் செல்லும் வழியில் ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடிகையிடம் டிரைவராக பணிபுரிந்து வந்த சுனில்குமார் என்பவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்திற்கு சுனில்குமார் தலைமையிலான அந்த கும்பல் மட்டும் தான் காரணம் என கருதப்பட்டது. அந்த சம்பவத்தின் பின்னணியில் மறைந்திருந்த ஒரு முக்கிய நபர் வெளிச்சத்திற்கு வராமல் இருந்தார். ஆனால் வழக்கை விசாரித்த தனிப்படையின் தலைவனாக இருந்த பிஜு பவுலோஸ் என்ற இன்ஸ்பெக்டரின் தீவிர விசாரணையில், நடிகை பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியவர் பிரபல நடிகர் திலீப் என தெரியவந்தது.
முக்கிய குற்றவாளியான சுனில் குமாருக்கும், திலீப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை இன்ஸ்பெக்டர் பிஜு கண்டுபிடித்தார். அவர் திரட்டிய ஆதாரங்களை வைத்துத் தான் பின்னர் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.தற்போது இவர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக உள்ளார். இந்நிலையில் இவருக்கு மத்திய அரசின் சிறந்த துப்பறியும் அதிகாரிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. பல வழக்குகளை சிறப்பாக துப்பறிந்து கண்டுபிடித்ததற்காக இன்ஸ்பெக்டர் பிஜுவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்பு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய பல கொலை வழக்குகளில் குற்றவாளிகளை மிக விரைவாக கண்டு பிடித்துள்ளார். கேரள அரசும் இவருக்கு பலமுறை விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. கேரளா போலீசில் ஊழலுக்கு இடம் கொடுக்காத அதிகாரி என்ற பெயரும் இவருக்கு உள்ளது.