பண மோசடியில் முன்னாள் கவர்னர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு...!
பண மோசடி விவகாரம் தொடர்பாக மிசோரம் மாநில முன்னாள் கவர்னரும், பாஜக கேரள மாநில தலைவருமான கும்மனம் ராஜசேகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநில பாஜக தலைவராக இருந்தவர் கும்மனம் ராஜசேகரன். இவர் கடந்த வருடம் மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் ஒரு இடைத் தேர்தலில் போட்டியிட இவர் விரும்பியதால் கவர்னர் பதவியில் இருந்து விலகித் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் சமீபத்தில் பாஜகவில் கட்சி நிர்வாகிகள் நியமனம் நடந்தது. இதில் தனக்கு ஏதாவது முக்கிய பொறுப்பு கிடைக்கும் என கும்மனம் ராஜசேகரன் கருதியிருந்தார்.
ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த அப்துல்லா குட்டி என்பவருக்குத் தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனால் கும்மனம் ராஜசேகரன் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.இந்நிலையில் பாலக்காடு அருகே உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தை சேர்ந்த விஜயன் என்பவர் பிளக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்க தீர்மானித்தார். ஆனால் அவரிடம் அதற்குத் தேவையான பணம் இல்லாததால் பங்குதாரர்களுடன் சேர்ந்து தொழிற்சாலை தொடங்க தீர்மானித்தார். விஜயனும், கும்மனம் ராஜசேகரனின் உதவியாளரான பிரவீன் என்பவரும் நண்பர்கள் ஆவர். பிரவீனிடம் அவர் விவரத்தைக் கூறினார். பங்குதாரர்களைச் சேர்க்க உதவுவதாக அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து ஆரன்முளா என்ற இடத்தை சேர்ந்த ஜோதிடரான ஹரிகிருஷ்ணன் என்பவரை சந்தித்த பிரவீன், பிளக்ஸ் தொழிற்சாலையில் பங்குதாரராகச் சேரவேண்டும் என்று கூறினார். முதலில் அதற்கு ஹரிகிருஷ்ணன் சம்மதிக்கவில்லை. ஆனால் பின்னர் கும்மனம் ராஜசேகரன் ஹரிகிருஷ்ணனை நேரடியாகச் சந்தித்து அந்த நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து பங்குதாரராக சேர ஹரிகிருஷ்ணன் சம்மதித்தார். தொடர்ந்து கடந்த இரு வருடங்களுக்கு முன் விஜயனிடம் ஹரிகிருஷ்ணன் 36 லட்சம் பணம் கொடுத்தார். ஆனால் 2 வருடங்களுக்கு மேலாகியும் தொழிற்சாலை தொடங்கப்படவில்லை.
இதையடுத்து பணத்தைத் திருப்பித் தருமாறு விஜயனிடம் ஹரிகிருஷ்ணன் கேட்டார்.அவர் 6 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்தார். ஆனால் பாக்கி தொகையைக் கொடுக்கவில்லை. இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் ஆரன்முளா போலீசில் புகார் செய்தார். போலீசார், விஜயன், பிரவீன் மற்றும் கும்மனம் ராஜசேகரன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கும்மனம் ராஜசேகரன் 4வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். பாஜக முன்னாள் கேரள மாநில தலைவரும், முன்னாள் கவர்னருமான கும்மனம் ராஜசேகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கும்மனம் ராஜசேகரன் கூறுகையில், அரசியல் ரீதியாக என்னைப் பழி வாங்குவதற்காகவே இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.இந்த மோசடியில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு என்னிடம் போலீசார் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்று கூறினார்.