நிதிஷுக்கு ஓய்வு கொடுக்க மோடி ரகசியத் திட்டம்.. ஓவைசி பேச்சு..
பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பாஜக முதல்வரை ஆட்சியில் அமர வைக்கப் பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறார் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார்.பீகாரில் சட்டசபைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி, பாஜக தொகுதிகளில் மட்டும் அந்த கட்சியை ஆதரிக்கிறது.அதே சமயம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அதை எதிர்த்துப் போட்டியிடுகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவர் பேசுகையில், ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பஸ்வான் கூட்டணியை விட்டு வெளியேறியது பற்றியோ, லோக்ஜனசக்தி தனியாகப் போட்டியிடுவது பற்றியோ ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. இதற்கிடையே, பீகார் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் கட்சியான மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியதாவது:பிரதமர் மோடி ஒரே சமயத்தில் 2 குதிரைகளில் பயணம் செய்ய முயல்கிறார். அவர் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்துப் போட்டியிடும் லோக்ஜனசக்தி கட்சியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காரணம், பிரதமரின் நோக்கம் எப்படியாவது நிதிஷ்குமாருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பாஜக முதல்வரை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதுதான். இதற்காகத்தான் பாஜக - ஆர்.எஸ்.எஸ் ரகசியத் திட்டம் தீட்டியிருக்கின்றன. அதனால்தான், பாஜக தனியாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாகக் கூறியிருக்கிறது. பாஜக அதிக இடங்களைப் பிடித்து அந்த கட்சித் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணம்.
இவ்வாறு ஓவைசி கூறினார்.