பிரபல இயக்குனரும், கின்னஸ் சாதனை இயக்குனர் மகனும் மோதல்.. சங்க தேர்தலில் சுவாரஸ்யம்..
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-22ம் ஆண்டு என இரண்டு வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி சென்னையில் நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியும் சில நாட்கள் யாரும் மனுத் தாக்கல் செய்யாமலிருந்த நிலையில் தற்போது போட்டி சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. சங்கத் தலைவர் பதவிக்குப் பிரபல இயக்குனரும், கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் மகனும் தலைவர் பதவிக்கு மோதுகின்றனர்.
1980கள் முதல் திரைப்படங்களில் பிரமாண்டம் காட்டி படங்களை இயக்கியதுடன் பல்வேறு வெற்றிப் படங்களை அளித்தவர் இயக்குனர் டி.ராஜேந்தர். அதேபோல் 70களில் தொடங்கி பல்வேறு அரசியல் பின்னணி படங்களையும், மிருகங்களை வைத்தும் படங்கள் இயக்கியவர் ராம நாராயணன்.
இவர் 100 திரைப்படங்கள் இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர். இவரது மகன் மற்றும் தயாரிப்பாளர் என்.ராமசாமி என்கிற முரளி ராம நாராயணனும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இரு அணிகளாக மோதுகின்றனர். இரு தரப்பினரும் இன்று மனுத் தாக்கல் செய்தனர்.தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு என்.ராமசாமி என்கிற முரளி ராமநாராயணன். துணைத் தலைவர்கள் 2 பதவிக்குச் சிவசக்தி எஸ்.டி. பாண்டியன், மற்றும் ஆர்,கே. சுரேஷ், செயலாளர்கள் 2பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் கே.ஜே.ஆர் (ராஜேஷ்), பொருளாளர்கள் பதவிக்கு எஸ்.சந்திர பிரகாஷ் ஜெயின் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.முன்னதாக காலையில் டைரக்டர் டி.ராஜேந்தர் மற்றும் அவரது அணியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.