சென்னையின் கடைசி பிளே ஆப் வாய்ப்பு! பழிதீர்க்குமா மும்பை?
ஐபிஎல் லீக் சுற்றின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை சூரையாடியது சென்னை அணி.இந்த சீசனின் தொடக்கம் சென்னைக்கு அணிக்குச் சிறப்பாக அமைந்தது. ஆனால் அதைத்தவிர மற்ற போட்டிகள் நினைத்தபடி அமையவில்லை.
இந்நிலையில் மும்பை அணியை ஷார்ஜாவில் மீண்டும் எதிர்கொள்ள ஆயுத்தமாகி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த போட்டியில் சென்னை அணி தோற்றால் அவர்கள் பிளே ஆஃப் செல்லவே வாய்ப்பில்லை என்பதால் இன்றைய போட்டியில் சுவாரசியத்திற்குப் பஞ்சமிருக்காது.
மும்பை அணியைப் பொறுத்தவரை விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆனால் சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 3 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்கள் பெரிதாக மாற்று வீரர்களைப் பயன்படுத்தாமல், ஒரே அணியை வைத்துச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் சென்னை அணிக்கு அதுபோன்று அணி இன்னும் அமையாதது பலவீனம் தான்.
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் கடந்த போட்டியில் காயத்தால் அவதிப்பட்டனர். எனவே இன்றைய போட்டியில் அவர்கள் இருவரும் விளையாடுவது சந்தேகம் தான் இது சென்னைக்கு பலத்தைக் கூட்டலாம்.
ஒருவேளை இவர்கள் இல்லாத பட்சத்தில் இவர்களுக்கு மாற்றாக கிரீஸ் லின் மற்றும் குல்கர்னி இருவரும் விளையாட வாய்ப்புண்டு. மற்றபடி மும்பை அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். ரோகித் சர்மா இல்லாதபட்சத்தில் பொல்லார்ட் பொறுப்பு கேப்டனாக செயல்பட வாய்ப்புண்டு. இந்த சீசனில் பொல்லார்ட் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாகச் செயல்படுவது சென்னைக்குத் தலைவலியை ஏற்படுத்தும்.
மும்பை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரை போல்ட், பும்ரா, கோல்டர் நைல் அணிக்கான பலத்தைச் சேர்ப்பார்கள்.
சென்னை அணியைப் பொறுத்தவரைச் சிறப்பான தொடக்கம் அமையாதது அணியின் தோல்விக்குக் காரணம். மிடில் ஆர்டரில் விளாசிய சாம் கரணை தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கி சென்னை பரிசீலனை செய்தது. இது ஓரளவிற்குக் கைகொடுக்க அவரையே தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்குவது தாக்கத்தை ஏற்படுத்தாது. சாம் கரண் மிடில் ஆர்டரில் ஆடிய போட்டியில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 200 க்கு மேல் இருந்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பின்னர் 150க்குள் அடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னை அணி தொடக்க ஆட்டக்காரருக்கு மாற்று வீரரை முயற்சித்து பார்க்கலாம்.
சென்னை அணியின் கேப்டன் தோனி இந்த சீசனில் இது வரை ஒரே ஒரு அரை சதத்தை மட்டுமே அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் ஸ்ட்ரைக் ரேட் இந்த சீசனில் 120க்கும் கீழ் என்ற மோசமான நிலையில் உள்ளது.
கடந்த சில போட்டிகளில் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் இது அணிக்கான பலத்தைக் கூட்டும். பந்து வீச்சைப் பொறுத்தவரை தீபக் சஹர் மற்றும் ஷர்துல் தாக்குர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.சென்னைக்கு முக்கியமான போட்டி என்பதால் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.மேலும் பிளசில் தவிர வேற யாரும் டாப் ஆர்டரில் சிறப்பாகச் செயல்படவில்லை.
இன்றைய போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. எனவே வானவேடிக்கைக்குப் பஞ்சம் இருக்காது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும்.