கொரோனாவாவது ஒன்னாவது.. பீகார் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குவியும் மக்கள்

பீகாரில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையல் , எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் தேர்தல் கூட்டங்களில் மக்கள் கட்டுக்கடங்காமல் கூடி அதிர வைக்கின்றனர். கொரோனா வைரஸ் விதிகளுக்கு மீறியதாக இருந்தபோதிலும் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பிரச்சாரம் அதிகாலையில் சரி , மாலையில் சரி எந்த நேரம் நடந்தாலும் , மக்கள் கூட்டம், பெரும்பாலான இடங்களில் 8ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வதாகவும் சில இடங்களில் 15ஆயிரம் பேர் கலந்து கொள்வதாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் தெரிவித்தனர். இவர்களில் யாரும் முக கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. கொரானா தொற்றும் எனப் பயம் கொஞ்சம் கூட இவர்களிடம் இல்லை.

இந்த பிரச்சாரங்களைத் தொடர்ந்து கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரச்சாரத்தில் இவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடல்போல் திரண்ட இந்த மக்கள் தங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதையும், பீகார் மாநிலத்தின் வளர்ச்சி வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லி உள்ளனர். திறமையற்ற என்டிஏ அரசு கடந்த 15 ஆண்டுகளாகப் பீகார் மாநிலத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறது, இனி வளர்ச்சிப் பாதையில் செல்வோம், என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் கொரானா தொற்று தடுப்பு விதிகளை மீறி மக்கள் கூடியதைப் பற்றி அவர் ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை மூத்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சிவானந்த் திவாரி கூறுகையில் பிரசாரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், இதிலிருந்து மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று தெரிகிறது, இதுவே முதலமைச்சர் நிதீஷ் குமாருக்குப் பேரிடியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நிச்சயம் மக்கள் மாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

More News >>